சாலொமோனின் நியாயத்தீர்ப்பு

யார் உண்மையான தெய்வம்? 

 இரண்டு பெண்கள் ஒரு குழந்தையை தன் குழந்தை என்று சொல்லி வாதாடினார்கள், அந்த விவாதம் ராஜாவின் அரண்மனை வரை சென்றது என்றால், நிச்சயமாகவே பலர் முயற்சி செய்தும் தீர்ப்பு கூற முடியாததினால் தான். அதில் ஒரு பெண் உண்மையான தாய், மற்றவளோ அந்த குழந்தை கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாயிருந்தாள், ஆனால் பிறந்து சில நாட்களே ஆகியிருந்த அந்த குழந்தைக்கோ தன்னுடைய தாய் யார் என்று அறிந்து கொள்ள முடியாத வயது, இப்படி தான் இந்த உலகமும் தன்னை உண்டாக்கின தேவன் யார் என்பதை புரிந்து கொள்ள முடியாத பரிதாபமான சூழ்நிலையில் உள்ளது, ஒரு பக்கம் தான் படைத்த மக்களுக்காக பரிதவிக்கின்ற தேவன், இன்னொரு பக்கம் அழிக்க துடிக்கும் சாத்தானின் சாம்ராஜ்யம் - 16.அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். 17.அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன். 18.நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. 19.இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. 20.அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள். 21.என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள். 22.அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள் - I இராஜாக்கள் 3:16-22

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தேவன் சாலொமோன் ராஜாவுக்கு விஷேசித்த ஞானத்தை கொடுத்து இருந்தார் - 11.ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், 12.உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை - I இராஜாக்கள் 3:11-12

சாலொமோன் ராஜா ஞானத்தை பெற்ற பின்பு நடந்த முதல் சம்பவமும் இதுதான், அது மாத்திரம் இல்லாமல் எத்தனையோ ராஜாக்கள், நியாதிபதிகள் ஆண்டு இருந்தாலும், வேதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரே ஒரு நியாயதீர்ப்பு கூறும் சம்பவமும் இதுதான் - 23.அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, 24.ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். 25.ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். 26.அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். 27.அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான் - I இராஜாக்கள் 3:23-27

சாலொமோன் ராஜா எப்படி உண்மையான தாயை கண்டு பிடித்தார்? ராஜாவுக்கு தெரியும் பெற்றத்தாயாள் தன் குழந்தையின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாது என்று, அதனால் தான் பிள்ளையைக் கொல்ல உத்தரவு இட்டார், அந்த உத்தரவு தான் கடைசியாக உண்மையை வெளி கொண்டு வந்தது, இப்படி தான் மரணம் சூழ்ந்த உலகத்தில் ஒரே ஒரு தெய்வம் கண்ணீர் என்ற அடையாளத்தோடு வந்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து தான் தான்  உண்மையான தெய்வம் என்பதை நிருபித்தார், பல தெய்வங்கள் நடனம், யோகா, கோபம் என்ற அடையாளங்களோடு சிலைகளாக உள்ளன, ஆனால் கண்ணீர் மற்றும் வேதனை என்கிற சிலுவையின் அடையாளத்தோடு இருக்கும்ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து தான், அவர் தான் உண்மையான தெய்வம்.

சாலொமோன் வாழ்ந்த காலத்திற்கு ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு பின்பு, அந்த சாலொமோனின் மண்டபத்திலிருந்த இயேசு கிறிஸ்துவிடம், நீர் தான் உண்மையான தெய்வமா என்று கேள்வி எழுப்பினார்கள், அதற்கான பதிலை சிலுவையில் கூறி தான் தான் உண்மையான தெய்வம் என்பதை நிருபித்தார் இயேசு கிறிஸ்து - 23.இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். 24.அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள் - யோவான் 10:23-24