குருடர் போல
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறித்து புலம்பல் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் தான் இது - 13.அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. 14.குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 15.விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது - புலம்பல் 4:13-15
பல நேரங்களில் தீர்க்கதரிசனங்கள் பரமரகசியமாக இருப்பதினால் பன்மையில் சொல்லப்படுவதும் உண்டு, மரண ஆக்கினை தீர்ப்படைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் சரிரம் உழுத நிலத்தைப் போல அடித்து கிழிக்கப்பட்டிருந்தது, மேலும் கோலினாலும் அடிக்கப்பட்டிருந்தார், போதா குறைக்கு முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்திருந்தார்கள், இப்படி அந்தகேடு அடைந்தவராய் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் வீதிகளில் அழைத்து செல்லப்பட்ட பொழுது அவர் இருந்த நிலைமையை தான் "ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்" என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது
இப்படி இரத்தம் சொட்ட, முள்ளுகளினால் செய்த முடியை அணிந்தவராய் இயேசு கிறிஸ்து நடந்து சென்றதை எதனோடும் ஒப்பிட முடியாமல், எரேமியா தன் புலம்பல் புஸ்தகத்தில் ஒரு பார்வையற்றவன் நடந்து செல்வது போல் (குருடர்போல வீதிகளில் அலைந்து) என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார், காரணம் பார்வையற்றவர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பொழுதும் அவ்வளவு கேள்விகளும் தயக்கங்களும் இருக்கும் - 13.பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். 14.அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். 15.அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். 16.அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். 17.அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார் - யோவான் 19:13-17
பார்வையற்றவர்களின் நடந்து செல்ல மற்றவர்களின் துணை அவசியம், அப்படியாக சிரேனே ஊரானாகிய சீமோனின் துணையுடன் கர்த்தர் கொல்கொதா நோக்கி நடந்து சென்றார் - 31.அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32.போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள். 33.கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 34.கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார் - மத்தேயு 27:31-34