மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்

எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரவேல் மக்கள் விடுதலை பெற, ஒரு காரியம் செய்ய வேண்டியதாய் இருந்தது, அது என்னவென்றால் அவர்கள் மூன்று நாள் பிரயாணத்தூரம் சென்று ஒரு விசேஷித்த பலியை செலுத்த வேண்டும் - 16.நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், 17.நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு. 18.அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள் - யாத்திராகமம் 3:16-18


இப்படி தேவன் சொன்ன பலியானது, இஸ்ரவேல் மக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தேவ கட்டளையாகவும், எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் நாளில் செலுத்த வேண்டிய பலியாகவும் இருந்தது - 1.பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள். 2.அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். 3.அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள் - யாத்திராகமம் 5:1-3

ஆனால், எகிப்திலிருந்த கிளம்பின இஸ்ரவேல் மக்கள் மூன்றாம் நாளில் கர்த்தர் சொன்ன பலியை செலுத்தவில்லை, அதற்கு மாறாக ஒரு அடையாளம் மாத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அது என்னவென்றால் அந்த மூன்றாம் நாளில் அவர்கள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, அங்கிருந்த கசப்பான தண்ணீர் ஒரு மரத்தால் மதுரமாக மாற்றப்பட்டு தாகம் தீர்க்கப்பட்டார்கள் - 22.பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். 23.அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. 24.அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். 25.மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: 26.நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் - யாத்திராகமம் 15:22-26

இந்த இஸ்ரவேல் மக்கள் மூன்று நாள் பிரயாணத்தூரம் சென்று செலுத்தவேண்டிய பலியை குறித்து ஏன் யாருமே பேசவில்லை? மோசே, ஆரோன் உட்பட, அதற்கு பின் வந்த தீர்க்கதரிசிகளும் கூட இந்த மூன்று நாள் பிரயாணத்தூரம் சென்று செலுத்தவேண்டிய பலியை குறித்து ஏன் பேசவில்லை? இப்படி யாருமே இந்த மூன்று நாள் பிரயாணத்தூரத்தை குறித்தும், தேவன் சொன்ன பலியை குறித்தும் பேசாத பொழுது, அன்று முற்செடியில் தரிசனமானவரே சொன்னது தான் இந்த வசனம் - 1.அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: 2.ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; 3.இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார் - மாற்கு 8:1-3


இப்படி தேவன் குறித்திருந்த வனாந்திரத்திலே, மூன்று நாளாகி விட்டதே என்பதை நினைவு கூர்ந்த கர்த்தர், அடுத்த பஸ்கா பண்டிகையின் பொழுது தன்னை தானே பலியாக ஈந்து, நம்மை பாவ அடிமை தனத்திலிருந்தும் நித்திய நரகத்திலிருந்தும் மீட்டார் 1.என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2.நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். 3.அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம் - I யோவான் 2:1-3


அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது

இப்படி கர்த்தரே நமக்காக பலியாக போவதினால் தான், மோசே நாங்கள் செலுத்த வேண்டிய பலி எப்படிப்பட்டதென்பது அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான் - 24.அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான். 25.அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும். 26.எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான் - யாத்திராகமம் 10:24-26


எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாயிருக்குமே

நாங்கள் செலுத்த வேண்டிய பலி எப்படிப்பட்டதென்பது அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்ற மோசே, அந்த பலியை குறித்து ஒரு குறிப்பு சொல்லியிருந்தார் அது என்னவென்றால் "எகிப்தியருடைய அருவருப்பு" என்பதாகும் - 25.அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான். 26.அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? 27.நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான் - யாத்திராகமம் 8:25-27


வேதாகமத்தின் படி, "எகிப்தியருடைய அருவருப்பு" என்பது எபிரெயர் என்கிற நாமத்திற்கு சொந்தக்காரரையே குறிக்கிறது - எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும் - ஆதியாகமம் 43:32


ஒரு நாள் என்பது நானூற்றுமுப்பது வருஷம்


இந்த மூன்று நாள் என்பது எவ்வளவு காலம் என்பதை யாருமே அறியாமல் இருந்த வேளையில், ஒரு நாள் என்பது நானூற்றுமுப்பது வருடம் என்கிற குறிப்பும் கொடுக்கப்பட்டது - 40.இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். 41.நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டது - யாத்திராகமம் 12:40-41


காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 


இப்படி 3 X 430 = 1290 வருடங்கள் கழித்து, தேவன் சொன்ன பலியாகிய சிலுவையின் இரட்சிப்பின் காலம் நெருங்கினத்தினால், பரிசேயரையும்  சதுசேயரையும் பார்த்து கர்த்தர் கேட்ட கேள்வி தான் "காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா" என்பது - 1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? - மத்தேயு 16:1-3


புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்


தேவன் சொன்ன மூன்று நாள் பிரயாணம் என்பது, நாள் கணக்கின் படியாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் கர்த்தர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து முதல் ஏழு நாளளவும் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிக்க சொல்லியிருந்தார், அப்படி முதல் ஏழு நாள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிக்கும் பொழுது மூன்றாம் நாளில் பலியையும் செலுத்த  வேண்டியதாய் இருக்குமே - 12.அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். 13.நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். 14.அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். 15.புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். 16.முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். 17.புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். 18.முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். 19.ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான். 20.புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார் - யாத்திராகமம் 12:12-20