காய்பாவின் தீர்க்கதரிசனம்
  ஒரே தீர்க்கதரிசனம்,  ஆனால் இரண்டு அர்த்தங்கள்.

இயேசுகிறிஸ்துவின் ஊழியகாலத்தின் துவக்கத்தில் காய்பா என்பவர் பிரதான ஆசாரியராக இருந்ததாக வேதாகமத்தில் சொல்லப்படுள்ளது - 2.அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. 3.அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4.பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,  5.மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,  6.அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான் - லூக்கா 3:2-6 

அந்த காய்பா தான் கடைசியில் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட, தேசாதிபதியாகிய பிலாத்துவின் அரமனைக்கு கிறிஸ்துவை அனுப்பி வைத்தான் - அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் -  யோவான் 18:28 

அது மாத்திரம் இல்லாமல் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தின் நாட்களிலும்  இயேசுவை பிடிக்க வகைதேடினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது  - 44.இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 45.பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46.அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள் - மத்தேயு 21:44-46

இப்படி பிரதான ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவை பிடிக்க வகைதேடி கொண்டு இருந்த சமயத்தில் தான் இயேசு கிறிஸ்து லாசருவை உயிருடன் எழுப்பினார் என்ற செய்தி அவர்களுக்கு வந்தது - 43.இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44.அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். 45.அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 46.அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள் - யோவான் 11:43-46


அந்த சூழ்நிலையில் பிரதான ஆசாரியனாகிய காய்பா சொன்னது தான் இந்த முக்கியமான தீர்க்கதரிசனம் - 49.அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; 50.ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான் - யோவான் 11:49-50

அப்பொழுது ஒரு கூட்டத்தார் இயேசுகிறிஸ்துவினிமித்தம், ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்று சொல்லி இயேசுவை கொலை செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்களாம் - 47.அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48.நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்  - யோவான் 11:47-48 & அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள் -  யோவான் 11:53

ஆனால் நமக்கோ அது இரட்சிப்பின் செய்தியாகவும், தீர்க்கதரிசனமாகவும் அமைந்து விட்டது - 51.இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 52.அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான் - யோவான் 11:51-52

அதிகாரத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்களுக்கு காய்பாவின் வார்த்தை கொலை செய்ய  தூண்டியதாகவும், தாழ்மை உள்ளவர்களுக்கோ அது இரட்சிப்பின் தீர்க்கதரிசனமாகவும் இருந்தது - பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார் - லூக்கா 1:52