தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று
யாக்கோபு தன் குமாரர்களாகிய சிமியோன் மற்றும் லேவியிடம் கடைசி நாட்களில் அவர்களுக்கு நேரிடும் காரியங்களை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தப் பொழுது, ஒரு கொலையை குறித்துப் சொன்னார் - 5.சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். 6.என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே - ஆதியாகமம் 49:5-6
இது யாக்கோபு தன் குமாரர்களாகிய சிமியோனும் லேவியும் சேர்ந்து ஏமோரியரின் பட்டணத்தாரை கொன்றுப் போட்டதை நினைவு கூறுவதை போல் தான் தோன்றுகிறது, ஆனால் அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை, ஏனென்றால் சிமியோனும் லேவியும் ஏமோரியரின் பட்டணத்தில் ஒரு கொலை செய்யவில்லை மாறாக முழு பட்டணத்தையுமே அளித்துப் போட்டிருந்தார்கள் - 24.அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். 25.மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். 26.ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் - ஆதியாகமம் 34:24-26
ஆனால் யாக்கோபு, கடைசி நாட்களில் நேரிடும் காரியங்களை குறித்துச் சொன்ன தீர்க்கதரிசனத்தின் படியே, அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணினார்கள் - 3.அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, 4.இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள் - மத்தேயு 26:3-4 & 1.விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, 2.அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள் - மத்தேயு 27:1-2
கடைசியில் யாக்கோபு உரைத்த சொன்ன தீர்க்கதரிசனத்தின் படியே, அவர்களால் இயேசு கிறிஸ்து மரண ஆக்கினைக்குட்படுத்தபட்டார் - 17.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். 18.அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். 19.அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். 20.நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். 21.அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது - லூக்கா 24:17-21