கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார்
இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு செல்லும் முன்பு சீஷர்களிடம், அதிலும் குறிப்பாக பேதுருவிடம் தன் பின்னே வரக்கூடாது என்று சொல்லியிருந்தார் - 33.பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34.நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35.நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். 36.சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார் - யோவான் 13:33-36
கர்த்தர் வரக்கூடாது என்று எவ்வளவோ சொல்லியும், பேதுரு இயேசு கிறிஸ்து விசாரிக்கப்பட போகிற பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான், பேதுரு உள்ளே வந்ததை கர்த்தரும் அறிந்திருந்தார் - 15.சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். 16.பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். 17.அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். 18.குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான் - யோவான் 18:15-18
அந்த சமயத்தில் தான், பிரதான ஆசாரியன் கர்த்தரிடம் அவருடைய சீஷரைக்குறித்து விசாரித்தான் - பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான் - யோவான் 18:19
யாரை குறித்து விசாரிக்கிறார்களோ அந்த நபர் அருகில் இருந்தால், அந்த நபரை பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கர்த்தர் பேதுருவை திரும்பி பார்க்காமலும், தன் சீஷரைக்குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும், தன் போதகத்தை குறித்த கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்லி பேதுருவை காப்பாற்றினார் - 20.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21.நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார் - யோவான் 18:20-21
இப்படி பிரதான ஆசாரியன் சீஷரைக்குறித்து விசாரித்த பொழுது பேதுருவின் பக்கம் திரும்பாமலும், பேதுருவை நோக்கி பார்க்காமலும் அவனை காப்பாற்றிய கர்த்தர், சேவல் கூவின பொழுது திரும்பி பேதுருவை நோக்கிப்பார்த்தாராம், சேவல் கூவினதினால் கர்த்தர் திரும்பினார் என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்தார்கள், ஆனால் பேதுருவுக்கு மாத்திரம் தான் தெரியும் கர்த்தர் திரும்பினதின் அர்த்தம் - 60.அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. 61.அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, 62.வெளியே போய், மனங்கசந்து அழுதான் - லூக்கா 22:60-62
கர்த்தர் தன்னை திரும்பி பார்த்தது பேதுருவுக்கு மிகப்பெரிய பாடமாகவே இருந்தது, அது கர்த்தரின் கட்டளைகளுக்கு எவ்வளவாய் கீழ்ப்படிய வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நினைவுறுத்தும் பாடமாக இருந்தது.
இப்படி கர்த்தர் பேதுருவை திரும்பி பார்த்து தன்னுடைய வார்த்தையை நினைவுறுத்திய பிறகு, கர்த்தருடைய கண்கள் கட்டப் பட்டதாம், அதனால் தான் தன் கண்கள் கட்டப்படும் முன்பு கர்த்தர் பேதுருவை திரும்பி பார்த்து தான் அவன் நோக்கமாக இருப்பதை அறிவுறுத்தினார் - 63.இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, 64.அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, 65.மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள் - லூக்கா 22:63-65