போவாஸ்

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுவுருவெடுக்க தெரிந்துக் கொண்ட வம்சத்தை வம்சவரலாறு இல்லாதவரின் வம்சவரலாறு என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,  இந்த வம்சவரலாற்றில் போவாஸ் எப்படி இடம்பெற்றார், நியாயப்பிரமாண கட்டளையின் படி, மரித்தபோன தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணி அவனுக்கு சந்ததியை உண்டாக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது - 5.சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். 6.மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும். 7.அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப் போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக. 8.அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால், 9.அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள். 10.இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும் - உபாகமம் 25:5-10


ஆனால் கணவனை இழந்த ரூத்தை மனைவியாக்கிக் கொள்ள, அவளின் மூத்த சுதந்தரவாளி ஒப்புக்கொள்ளவில்லை - 5.அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான். 6.அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான் - ரூத் 4:5-6  

காரணம் ரூத் மோவாபிய ஜனத்தை சேர்ந்தவள், அந்த மோவாபிய ஜனமோ கர்த்தருடைய சபைக்கு தகாதவர்களாய் இருந்தார்கள் - 3.அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 4.நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும். 5.உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். 6.நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே - உபாகமம் 23:3-6


இப்படி மூத்த சுதந்தரவாளி ரூத்தை விவாகம்பண்ண சம்மதிக்காத சூழ்நிலையில் தான் போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணி கொண்டார், போவாஸுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலை தான், ஆனாலும் மரித்தபோன தன் சகோதரனுக்கு சந்ததியை உண்டாக்க வேண்டும் என்கிற தேவ கட்டளையை போவாஸ் நிறைவேற்றினார் - 7.மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு. 8.அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான். 9.அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. 10.இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்- ரூத் 4:5-10

போவாஸுக்கு இயேசு கிறிஸ்து தன் சந்ததியில் பிறக்க போகிறார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் போவாஸ் தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற பிரியாசப்பட்டதை கர்த்தர் ம் பண்ணினார் என்பதை மத்தேயுவின் முதல் அதிகாரத்தை படிக்கும் பொழுதே அறிந்து கொள்ளலாம், எப்படி போவாஸ் எலிமெலேக்கின் வம்சத்தை நிலைக்க செய்தாரோ, அது போலவே தேவகுமாரனும் மரித்து போன மனுக்குலத்தை உயிர்ப்பிக்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார், எப்படி அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்கிற சாபம் இருந்தும், போவாஸின் மூலமாக ரூத்திற்க்கு ஒரு கிருபை கிடைத்ததோ  அது போலவே கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்கிற சாபத்தோடு இருந்த புறஜாதியாருக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் கிருபை கிடைத்தது.