தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே

சங்கீதகாரனாகிய தாவீது, வரப்போகிற மெசியாவை குறித்து சொல்லும் பொழுது கர்த்தர் நல்லவர் என்ற ரகசியத்தை எழுதி வைத்துள்ளார், ஏன் எழுதிவைத்தார் என்றால்? இந்த பூமியில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், உண்மையான தெய்வத்தை நல்லவர் என்ற அடையாளத்தை கொண்டு கண்டு பிடிக்க முடியும் என்ற இரகசியத்தை வெளிப்படுத்த தான் இதை சங்கீத புஸ்தகத்தில் எழுதி வைத்துள்ளார். எப்படி என்றால் ஒரு தேசத்திற்கு ஒரே ஒரு ஜனாதிபதி தான் இருக்க முடியும், அதே போல் ஒரு கல்லூரிக்கு ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும், அதே போல சர்லோவகத்திலும் ஒரே ஒருவர் தான் நல்லவராய் இருக்க முடியும் என்று தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துள்ளார்  - கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது - சங்கீதம் 100:5



கர்த்தர் நல்லவர் என்று உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் படியே, மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பாவமானிடரை மீட்க இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார், அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு ஐசுவரியவான் இயேசு கிறிஸ்துவை நல்லவர் என்று அழைத்தான் - பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான் - மாற்கு 10:17


அவன் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவை தேவன் என்று அறிந்து நல்லவர் என்று அழைத்தானா என்பது ஒரு கேள்விகுறி தான்? இதை நம்மால் கண்டு பிடிக்க முடியாது, ஆனால் சகலத்தையும் அறிந்த தேவனாகிய இயேசு கிறிஸ்து, ஒரு கேள்வியின் மூலம் அதனை வெளியே கொண்டு வந்தார் - அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே - மாற்கு 10:18


அவன் சொன்ன பதிலில் இயேசு கிறிஸ்துவை குறித்து அவன் இருதயத்தில் இருந்த எண்ணம் வெளிப்பட்டது, எப்படியேனில், ஆரம்பத்தில் நல்ல போதகரே என்று அழைத்தவன், இப்பொழுது நல்லவர் என்ற வார்த்தையை ரகசியமாக நீக்கிவிட்டு போதகரே என்று அழைத்தான் - அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் - மாற்கு 10:20


முடிவு பரிதாபம் தான், அந்த ஐசுவரியவான் நல்லவர் என்ற வார்த்தையை ரகசியமாக நீக்கிவிட்டு இயேசு கிறிஸ்துவை தேவன் இல்லை என்று அறிக்கை இட்டவுடனே, தேவனுடைய ராஜ்யத்தை இழந்தவனாக துக்கத்தோடேப் போய்விட்டான் - 21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். 22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் - மாற்கு 10:21-22


ஒரு வேளை, அவன் இயேசு கிறிஸ்துவை மறுபடியும் நல்லவர் என்று அழைத்து, தேவன் ஒருவர் தான் நல்லவர், அதனால் தான் உம்மை நல்லவர் என்று அழைக்கிறேன் என்று மனதார சொல்லியிருந்தால், பரலோக ராஜ்யத்தை பெற்றவனாக சந்தோஷத்தோடு போயிருப்பான்.