கர்த்தருக்குப் பலியிடவந்தேன்
இயேசு கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசியான சாமுவேலும் தீர்க்கதரிசனம் உரைத்திருந்ததாக அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது, சாமுவேல் கர்த்தரை குறித்து என்ன தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்? அதை நாம் எப்படி கண்டுபிடிப்பது? - 22.மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 23.அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். 24.சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள் - அப்போஸ்தலர் 3:22-24
காரணம் இயேசு கிறிஸ்துவை குறித்த காரியங்கள் மிகவும் மறைமுகமாக தான் சொல்லப்பட்டு வந்தன, இதில் சாமுவேல் இயேசு கிறிஸ்துவை குறித்து உரைத்த தீர்க்கதரிசனத்தை அறிந்துக் கொள்வதற்கு முன்பாக, நம் தேவனால் பொய் சொல்ல இயலாது என்கிற காரியத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் - பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19
இப்படி பொய்யுரையாத தேவன், ஒருமுறை சவுலுக்கு பயந்து தீர்க்கதரிசியான சாமுவேலை பொய் சொல்ல சொன்னது போன்ற ஒரு காரியத்தை வேதாகமத்தில் பார்க்கலாம், இதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? ஏனென்றால் நம் எல்லோருடைய சுவாசத்தையும் தன் கையில் வைத்திருக்கிற தேவன், அன்றைக்கே சவுலின் சுவாசத்தை எடுத்துக் கொண்டிருக்க முடியுமே? - 1.கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 2.அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, 3.ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார் - I சாமுவேல் 16:1-3
இதில் சாமுவேல் பெத்லெகேமுக்கு சென்றதற்கு சொல்லப்பட்ட உண்மையான காரணம் தாவீதை ராஜாவாக தெரிந்துக் கொள்வதற்காக, பொய்யான காரணம் பலி செலுத்துவதற்காக, ஆனால் வேதாகமம் திட்டமும் தெளிவுமாக சொல்லுகிறது, நம் தேவன் பொய் சொல்லுகிறவரல்ல என்று, அப்படியானால் பலியிடவந்தேன் என்று சாமுவேல் சொன்னதே கர்த்தரின் பிரதான நோக்கமாகவும் தாவீதை தெரிந்துக் கொள்வதற்கான காரணமாகவும் தீர்க்கதரிசனமாகவும் இருந்தது - 4.கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். 5.அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான் - I சாமுவேல் 16:4-5
இப்படி கர்த்தர் சொன்ன ஆலோசனையின் படி தாவீதை அபிஷேகம் செய்ய சென்ற சாமுவேல், கேட்ட எல்லோரிடமும் "கர்த்தருக்குப் பலியிடவந்தேன்" என்கிற காரணத்தை தான் சொன்னார், ஆனால் சாமுவேல் சொன்ன இந்த காரணத்தை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, கடைசியாக சாமுவேல் தாவீதை அபிஷேகம்பண்ணும் பொழுது எல்லோரும் என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆனால் தேவனுடைய பார்வையில், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்கிற காரணமே பிரதான காரணமாய் இருந்தது - 6.அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். 7.கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 8.அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான். 9.ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 10.இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; 11.உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். 12.ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 13.அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான் - I சாமுவேல் 16:6-13
இப்படி கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்று தேவனால் தெரிந்துக் கொல்லப்பட்ட தாவீதின் வம்சத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து தான் நம் எல்லோருடைய பாவத்திற்க்காகவும் சிலுவையில் பலியாகி நம்மை ரட்சித்தார், இதை செய்ய எந்த மனுஷனாலும் கூடாது, அதனால் தேவனே இந்த பூமிக்கு வந்து நமக்காக பலியாகி நம்மை ரட்சித்தார் - நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார் - I யோவான் 2:2