கல்லறையின் விளக்கம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, நம் பரலோக பிதாவாகிய தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று நபர்களாக இருப்பதாகவும் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7), இந்த மூன்று நபர்களின் குமாரர்களும், முறையாக ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் (பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8), அதனால் தான் தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது (6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7).
கல்லறையின் விளக்கம்
புதிய ஏற்பாட்டில் முதலாம் சுவிசேஷ புஸ்தகமாகிய மத்தேயுவின் புஸ்தகத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை குறித்துச் சொல்லும் பொழுது, கர்த்தர் வைக்கப்பட்டிருந்த கல்லறையில் யாரையும் கண்டதாகச் சொல்லப்பட வில்லை - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4.காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். 5.தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; 7.சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 8.அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள் - மத்தேயு 28:1-8
ஆனால், மாற்கு சுவிசேஷ புத்தகத்தில், கர்த்தர் வைக்கப்பட்டிருந்த கல்லறையில் ஒருவரை கண்டதாகக் சொல்லப்பட்டுள்ளது, நிச்சியமாகவே அது ஒரு மேலான அனுபவம் தான் - 1.ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3.கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 4.அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். 5.அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். 6.அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7.நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 8.நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள் - மாற்கு 16:1-8
அதே சமயத்தில், லூக்கா சுவிசேஷ புத்தகத்தில், கர்த்தர் வைக்கப்பட்டிருந்த கல்லறையில் இரண்டுபேரை கண்டார்கள், அது இன்னும் ஒரு படி மேலான அனுபவமாக தான் இருந்தது - 1.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2.கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, 3.உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4.அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள். 5.அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6.அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7.மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். 8.அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, 9.கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள் - லூக்கா 24:1-9
கடைசியில், யோவான் சுவிசேஷ புத்தகத்தில், கர்த்தர் வைக்கப்பட்டிருந்த கல்லறையில், மகதலேனா மரியாள் இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை தரிசித்த அனுபவத்தை அழகாக குறிப்பிட்டுள்ளார் - 11.மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12.இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13.அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14.இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18.மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள் - யோவான் 20:11-18