என் கைகளைப் பார்
ரோமர்கள் மரணதண்டனையை நிறைவேற்ற பயன்படுத்திய சிலுவை தான் இன்றளவும் மிகக்கொடூரமான மரணதண்டனையாக கருதப்படுகிறது, அப்படிப்பட்ட கொடூரமான சிலுவையில் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அறையப்பட்டார், அப்படி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பயன் படுத்தப்பட்ட ஆணிகள் எவ்வளவு தடிமனாய் இருந்தது? - 22.கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், 23.வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24.அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள் - மாற்கு 15:22-24
அது மாத்திரம் இல்லாமல், பரலோகத்தின் பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து நமக்காக மரித்த பொழுது உயிர் இருக்கிறதா என்று பார்க்க ஈட்டியினாலே விலாவில் குத்தினார்களாம், ஒருவருக்கு உயிர் இருக்கிறதா என்று நாடி பிடித்துப் பார்ப்பது தான் பூர்வகாலத்து வழக்கம், ஒரு மேய்ப்பன் தன் மந்தையில் உள்ள ஆடு மரித்தால் கூட குத்தி பார்க்க மாட்டான், ஆனால் இயேசு கிறிஸ்து மரித்த பொழுது உயிர் இருக்கிறதா என்று பார்க்க ஈட்டியினாலே விலாவில் குத்தினார்களாம், அந்த ஈட்டியின் தடிமம் தான் என்ன? - 33.அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. 34.ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. 35.அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான் - யோவான் 19:33-35
ஆனால் ஈட்டியின் மாதிரிகள் பல கிடைத்த பொழுதும், சிலுவை ஆணிகளின் தடிமத்தை குறித்த சரியான ஆதாரங்கள் இன்றளவும் கிடைக்கவில்லை, ஆனால் மரணத்தை வென்ற நம் கர்த்தர், தன் கைகளில் அறையப்பட்ட கொடூரமான ஆணிகளின் தடிமனை குறித்தும், தன் விலாவிலே குத்தின ஈட்டியின் தடிமனை குறித்தும் தன் சீஷர்களுக்கு விளக்கிச் சொன்னார்- 24.இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. 25.மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். 26.மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27.பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். 28.தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29.அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் - யோவான் 20:24-29
நம் கர்த்தரின் கைகளில் அறையப்பட்ட ஆணிகள் நம் விரலை காட்டிலும் தடிமனாய் இருந்ததாம், அதனால் தான், அந்த ஆணிகளால் ஒரு மனிதனின் விரல் போகும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்த முடிந்தது - நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார்
நம் கர்த்தரின் விலாவிலே குத்தின ஈட்டியின் அகல் நம் கையை காட்டிலும் தடிமனாய் இருந்ததாம், அதனால் தான், அந்த ஈட்டியினால் ஒரு மனிதனின் கை போகும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்த முடிந்தது - உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு
நம்முடைய மீறுதல்களையும், நம்முடைய அக்கிரமங்களையும் அவர் ஏற்று கொண்டதினால் தானே நம் கர்த்தருக்கு இவ்வளவு பாடுகள் - நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் - ஏசாயா 53:5