யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல
இயேசு கிறிஸ்துவின் சீஷரில் ஒருவன் அவரிடம், யோவானைப் போல தங்களுக்கு ஜெபம்பண்ணப் சொல்லித் தரவேண்டும் என்றான் - அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான் - லூக்கா 11:1
அந்த காலகட்டத்தில் சீஷர்களுக்கு தங்கள் போதகராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவாதி தேவன் என்பது தெரியாது, அந்த சூழ்நிலையில் தான் சீஷரில் ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் யோவானைப் போல தங்களுக்கு ஜெபம்பண்ணப் போதிக்கவேண்டும் என்றான், சீஷர்களின் இந்த விண்ணப்பத்தை சில உதாரணங்களுடன் ஆராய்ந்து பார்த்தால் கிறிஸ்துவின் தாழ்மையை நாம் இன்னும் நன்றாய் புரிந்துக் கொள்ள முடியும், உதாரணத்திற்கு ஒரு பள்ளி மாணவன் தன் தலைமை ஆசிரியரிடம் நீங்கள் அந்த ஆசிரியரிரை போல் எங்களுக்கு சொல்லி கொடுங்கள் என்று சொன்னால், அந்த தலைமை ஆசிரியர் எவ்வளவாய் கோபப்படுவார்? அல்லது ஒரு திருச்சபையின் மக்கள், தன் சபையின் பிஷப் பொறுப்பில் இருப்பவரிடம் நீங்கள் அந்த ஊழியரை போல் எங்களுக்கு போதகம் பண்ணுங்கள் என்று சொன்னால், அவர் எவ்வளவாய் வருத்தப்படுவார்.
ஆனால் சகலத்தையும் உருவாகின சர்வ வல்லமை பொருந்திய தேவனிடம், அதுவும் அந்த யோவானுடைய ஜெபம் கூட இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தான் பரலோகத்திற்கு செல்லும் பொழுது, நீங்கள் யோவானைப் போல எங்களுக்கு ஜெபம்பண்ண சொல்லித் தரவேண்டும் என்ற சீஷர்களுக்கு, கர்த்தர் எந்த ஆதங்கமுமின்றி ஜெபம்பண்ணச் சொல்லி கொடுத்தார் - 2.அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; 3.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; 4.எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார் - லூக்கா 11:2-4
அது மாத்திரம் இல்லாமல், தன் சீஷர்களுக்கு ஜெபத்தோடு ஒரு உதாரணத்தையும் சொல்லிக் கொடுத்தார் - 5.பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, 6.என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 7.வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 8.பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 11:5-8
அதனை தொடர்ந்து, பரிசுத்த ஆவியின் நிச்சியத்தையும் சொல்லிக் கொடுத்தார் - 9.மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 10.ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 11.உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 12.அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் - லூக்கா 11:9-13