எலியா வந்தாயிற்று

 இயேசு கிறிஸ்து மெசியாவாக இந்த பூமிக்கு வருவதற்கான அடையாளமாக இருந்தவர் தான் எலியா தீர்க்கதரிசி, அதனால் தான் யோவான் ஸ்நானகனின் பிறப்பு அநேகருக்கு சந்தோஷத்தின் செய்தியாக இருக்கும் என்று வேதாகமம் சொல்லுகிறது, ஆனால் யார் அந்த அநேகர் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான காரியமாக இருக்கிறது? - 13.தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14.உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள் - லூக்கா 1:13-14



இந்த யோவான் ஸ்நானகனின் பிறப்பு அநேகருக்கு சந்தோஷத்தின் செய்தியாக இருக்கும் என்கிற வாக்குத்தத்தம் ஏரோதியாளின் வாழ்க்கையில் எதிர் மறையாக நடந்துவிட்டது, அவள் அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாளாம், காரணம் மாமிச இச்சையும், வேசித்தனமுமே - 17.ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, 18.யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 19.ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று - மாற்கு 6:17-19



அடுத்து ஆசாரியர், லேவியர், பரிசேயர் என்கிற  உலக பிரகாரமான அடையாளங்களை உடையவர்கள்,  உண்மையிலேயே தேவனை தேடுபவர்களிடம் இந்த அடையாளங்கள் இருக்காது, மேலும் இந்த உலக பிரகாரமான அடையாளங்கள் தேவன் விரும்பாத காரியமாகவே இருக்கிறது, அப்படிப்பட்டவர்களிடம் யோவான் ஸ்நானகன் தான் எலியா என்கிற ரகசியமே மறுக்கப்பட்டு விட்டது, அதனால் வந்தவர்கள் எருசலேமிலிருந்து யூதாவின் வனாந்திரத்திற்க்கு அவ்வளவு தூரம் நடந்து வந்தும், தேவன் மெசியாவாக இந்த பூமிக்கு வந்ததை அறிந்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது - 19.எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20.அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21.அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். 22.அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23.அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். 24.அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள் - யோவான் 1:19-24


இப்படி ஆசாரியர், லேவியர், பரிசேயர் என்கிற உலக அடையாளம் உள்ளவர்களிடம் கிறிஸ்துவின் வருகையின் செய்தி மறைக்கப்பட்ட அதே சமயத்தில் குறைசொல்லுகிறவர்கள் என்கிற ஒரு கூட்டத்தாரும் இயேசுவை காண வந்தார்கள், அவர்களிடமும் எலியா வந்த செய்தி அறிவிக்கப்பட்டது, ஆனால் "நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்" என்று கேட்கிறவர்கள் சந்தேகப்படும் விதமாகவே அறிவிக்கப்பட்டது,  அதனால் அவர்களால் தேவன் மெசியாவாக இந்த பூமிக்கு வந்ததை அறிந்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது - 7.அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8.அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். 9.அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10.அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 11.ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். 12.யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13.நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. 14.நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். 15.கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது - மத்தேயு 11:12-17


ஆனால் இயேசு கிறிஸ்துவை உண்மையாய் நேசித்து, எப்பொழுதும் அவரை பற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு, எலியா வந்த செய்தி ஆணித்தரமாக அறிவிக்கப்பட்டது, அவர்களே மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவை கண்டுக்கொண்டார்கள் - 10.அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். 11.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். 12.ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13.அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 17:10-13



நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து நாம் எப்படி பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்? கர்த்தர் பூமிக்கு வந்த செய்தியை அறிவிக்க வேண்டிய யோவான்ஸ்நானன் ஏரோதியாளுக்கு எதிரியாய் மாறிவிட்டான்,  ஆசாரியர், லேவியர், பரிசேயர் என்கிற உலக அடையாளம் உள்ளவர்களிடம் கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த செய்தி மறைக்கப்பட்டது, அதே சமயத்தில் எப்பொழுதும் குறைசொல்லி கொண்டிருக்கும் கூட்டத்தாரிடம் சந்தேகப்படும் விதமாகவே அறிவிக்கப்பட்டது, ஆனால் இயேசு கிறிஸ்துவை உண்மையாய் நேசித்து, எப்பொழுதும் அவரை பற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரமே இந்த உண்மை அதிகார பூர்வமாய் அறிவிக்கப்பட்டது, இந்த நான்கு விதமான கூட்டத்தில் நாம் யாராக இருக்கிறோம்?