ஆபிரகாமின் விளக்கம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய மூன்று பேருமே, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஜலம், இரத்தம், ஆவியாக இருந்தார்கள் என்றும், இது குமாரனைக்குறித்துக் பிதாவாகிய தேவனே கொடுத்த சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. - I யோவான் 5:8-9
எப்படியெனில் திருத்துவத்தில் இரண்டாவது நபராகிய வார்த்தையானவர் தன் குமாரனை அனுப்பிய பொழுது(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), திருத்துவத்தில் முதல் நபராகிய பிதாவினுடைய குமாரனும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் (கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இயேசு கிறிஸ்துவுக்குள் கிருபையும் சத்தியமுமாக குடியிருந்தார்கள் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14
அதனால் தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவை தேவர்கள் என்றும், உன்னதமானவரின் மக்கள்(குமாரர்கள்) என்றும் பன்மையில் குறிப்பிட்டுள்ளார் - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7 அப்போஸ்தலனாகிய பவுலும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வார்த்தையானவரின் தற்சுரூபம் என்று அழைக்கப்படாமல், அதரிசனமான திரியேக தேவனுடைய தற்சுரூபம் என்று அழைக்கப்படுகிறார் - அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் - கொலோசெயர் 1:15
இப்படி திரியேக தேவனே நமக்காக சிலுவையின் பாடுகளை அனுபவித்ததினால் தான், மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, தன் சீஷர்களை பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டார் - 19.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் - மத்தேயு 28:19-20.
இரகசியம் அறிந்தத சீஷர்களோ, நீங்கள் தானே பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் என்று சொல்லி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டார்கள் - 47.அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48.கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான் - அப்போஸ்தலர் 10:47-48a
ஆபிரகாமின் விளக்கம்
ஆபிரகாம், ஆபிராம் என்ற பெயருடைவராக இருந்த பொழுது மூன்று பலிபீடங்களை கட்டினார் என்று வேதாகமம் சொல்லுகிறது, ஆனால் அந்த பலிபீடங்களின் மேல் பலி ஒன்றும் கொடுத்ததாக சொல்லப்படவே இல்லை.
முதல் பலிபீடம்: 6.ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். 7.கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான் - ஆதி 12:6-7
இரண்டாம் பலிபீடம்: பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் - ஆதி 12:8
மூன்றாம் பலிபீடம்: அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான் - ஆதி 13:18
இப்படி ஆபிராம் கட்டிய மூன்று பலிபீடங்கள் பரலோகத்தின் தேவனை, அதாவது நாம் காணக்கூடாத அதரிசனமான பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனை குறிப்பதாகவே இருந்தது, இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக(பிதாவாக) இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
இப்படி மூன்று பலிபீடங்களை கட்டிய ஆபிராம், கர்த்தரிடம் தான் எப்படி ஆபிரகமாக மாறுவது, எப்படி கானான் தேசத்தை அதாவது பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்ளுவது என்று கேட்பதை தான் இந்த வசனங்களில் பார்க்க முடிகிறது - 5.அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். 6.அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 7.பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். 8.அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான் - ஆதி 15:5-8
அப்பொழுது தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன பதில் தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த இரகசியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது, அது மாத்திரம் இல்லாமல், தேவக்குமாரன் ஒரு பலியாக வரப்போகிறார் என்ற இரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருந்தது.
இதனை அறிந்து கொள்ள முதலாவது நாம் (מְשֻׁלָּ֑שׁ) shaw-lash => ஷாவ்-லாஷ் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும், அது ஒரு பொருளை மூன்று பகுதியாக பிரிப்பதை குறிப்பதாகும், உபாகமம் புஸ்தகத்தில் ஷாவ்-லாஷ் என்ற வார்த்தை "மூன்று பங்காகப் பகுத்து" என்ற அர்த்ததுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது - கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து(מְשֻׁלָּ֑שׁ) அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய் - உபா 19:3
இப்பொழுது தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன பதிலை பார்ப்போம், தேவன் ஆபிராமை மூன்று விதமான பலியாடுகளை(கிடாரி, வெள்ளாடு, ஆட்டுக்கடா) கொண்டு வரச்சொல்லுகிறார், (இதில் கிடாரி என்பது எபிரேய மொழியில் காளை என்று சொல்லப்பட்டுள்ளது) அது மாத்திரம் இல்லாமல் ஒவ்வொரு பலியாட்டிலிருந்தும் மூன்றில் ஒரு பாகத்தை (מְשֻׁלָּ֑שׁ => ஷாவ்-லாஷ்) எடுக்க சொல்லுகிறார், உதாரணத்திற்கு ஒரு பலியாட்டின் எடை 90 கிலோ இருக்குமானால், மூன்றில் ஒரு பாகம் என்பது 30 கிலோ பெறுமானம் உள்ள பகுதி ஆகும், இப்படி மூன்று பலியாட்டில் இருந்து 30 கிலோ பெறுமானம் உள்ள பகுதியை எடுக்கும் பொழுது அது ஒரு முழு பலியாட்டுடைய எடைக்கு ஈடாக இருக்கும் அல்லவா? அப்படி மூன்று விதமான பலிபொருளில் இருந்து எடுக்கப்பட்ட துண்டங்களை தகனிக்க சொன்னதை பார்க்க முடிகிறது - 9.அதற்கு அவர்: ஷாவ்-லாஷ்(மூன்றில் ஒரு பாகம்) கிடாரியையும், ஷாவ்-லாஷ்(மூன்றில் ஒரு பாகம்) வெள்ளாட்டையும், ஷாவ்-லாஷ்(மூன்றில் ஒரு பாகம்) ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார், 10.அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை - ஆதி 15:9-10
இப்படி இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனிடத்திலிருந்து உண்டாவனராகவும், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்ற காணக்கூடாத தேவனுடைய ஒரே தற்சுரூபமாகவும் வெளிப்பட்டார். இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக ஒரே நபராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
இப்படி நமக்காக பலியான தேவன் பிதாவும் குமாரனுமாக இருக்கிறார் என்பதை அறிவுறுத்த ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் தேவன் கொண்டு வரச்சொன்னதையும் பார்க்க முடிகிறது - ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார் - ஆதி 15:9b
இதை அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கும் பொழுது, நமக்கு பிதாவாகிய ஒரே தேவனும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் உண்டு என்று சொல்லுகிறார் - பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம் - I கொரிந்தியர் 8:6