யாக்கோபின் விளக்கம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7.
யாக்கோபின் விளக்கம்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டு சீமானாயிருந்த ஆபிரகாமின் பேரனும், ஈசாக்கின் குமாரனுமாகிய யாக்கோபு, பெயெர்செபாவிலிருந்து ஆரானுக்கு சென்ற பொழுது வெறும் கோலும் கையுமாய் தேவ ஆசிர்வாதத்தை மாத்திரமே நம்பினவராய் தான் சென்றார் - 10.யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11.ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான் - ஆதியாகமம் 28:10-11
அப்படி வெறும் கோலும் கையுமாய் சென்ற யாக்கோபுக்கு பெத்தேல் என்ற இடத்தில், தேவன் சொப்பனத்தில் தரிசனம் தந்து அவனை ஆசிர்வதித்தார் - 12.அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13.அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14.உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15.நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 16.யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17.அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். 18.அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, 19.அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது - ஆதி 28:12-19
அப்பொழுது யாக்கோபு தன்னை ஆசிர்வதித்த தேவனோடு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டார், இது தான் வேதாகமத்தில் சொல்லப்பட்ட முதல் தசமபாக பொருத்தனையாகும். ஏன் மனித வரலாற்றிலேயே கூட இதுதான் முதல் பொருத்தனை சம்பவம் ஆகும் - 20.அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21.என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; 22.நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான் - ஆதியாகமம் 28:20-22
இப்படி வெறும் கோலும் கையுமாய் ஆரானுக்கு வந்த யாக்கோபு, தன் தாய்மாமன் வீட்டில் 14 வருடங்கள் தன் இரண்டு மனைவிகளுக்காக வேலை செய்துவிட்டு, பெயெர்செபாவுக்கு திரும்பி செல்ல எத்தனிக்கும் பொழுது தான், யாக்கோபின் தாய்மாமனாகிய லாபான் தன் மந்தையை தொடர்ந்து கவனித்துக் கொள்ளச் சொன்னார் - 25.ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். 26.நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். 27.அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். 28.உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான் - ஆதியாகமம் 30:25-28
லாபானின் மந்தையை தொடர்ந்து பார்த்துக்கொள்ள யாக்கோபு ஒரு வித்தியாசமான சம்பளத்தை கேட்கிறார், அது என்னவென்றால் லாபானின் மந்தையில் மூன்று விதமான ஆடுகள் இருந்தன (Speckled and spotted sheep, black lamb, and spotted and speckled goat) (தமிழ் மொழிபெயர்ப்பில் அதில் இரண்டை குறித்து தான் எழுதப்பட்டுள்ளது, ஆதாரத்திற்கு நீங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பையோ அல்லது எபிரேய மொழிபெயர்ப்பையோ படிக்கலாம்). இப்பொழுது யாக்கோபு லாபானை நோக்கி மந்தையிலுள்ள இந்த மூன்று விதமான ஆடுகளையும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள், நான் மீதியுள்ள ஆடுகளை பார்த்துக் கொள்கிறேன், இந்த மீதியுள்ள ஆடுகள் அந்த மூன்று விதமான குட்டிகளை போட்டால் அது என்னுடையது, மற்ற குட்டிகள் எல்லாம் உம்முடையதாகும் என்றான் - 29.அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். 30.நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். 31.அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். 32.நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். 33.அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான் - ஆதியாகமம் 30:29-33
யாக்கோபு கேட்ட சம்பளம் இந்த உலகத்தில் யாருமே கேட்காத ஓன்று தான், அது லாபானுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும், அதனால் யாக்கோபு கேட்டதை சம்பளமாக தர உடனே ஒப்புக்கொண்டான், இதை எளிதாக புரிந்துக் கொள்ள இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம், லாபானின் மந்தையில் பசு மாடுகளும் எருமை மாடுகளும் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது யாக்கோபு லாபானிடம் நீர் உம்முடைய மந்தையில் இருக்கும் பசு மாடுகளை எல்லாம் கொண்டு போய் விடும், நான் மீதமுள்ள எருமை மாடுகளை பார்த்துக் கொள்ளுகிறேன், இப்பொழுது என்னிடம் இருக்கும் எருமை மாடுகள் பசு கன்றை ஈன்றால் அது என்னுடையது எருமை கன்றுகளை ஈன்றால் அது உம்முடையது என்பது போல் யாக்கோபு லாபானிடம் கேட்டான், இதை லாபானும் உடனே ஏற்றுக் கொண்டான் ஏன் என்றால் எருமை மாடுகள் பசு கன்றை ஈன வாய்ப்பேயில்லை.
அதனால் தான் லாபான் அந்த மூன்று விதமான ஆடுகளையும் (கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள்) பிரித்து தன்னிடம் வைத்துக் கொண்டு, மற்ற ஆடுகளை யாக்கோபை பார்த்துக்கொள்ள சொன்னார் - 34.அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, 35.அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, 36.தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான் - ஆதியாகமம் 30:34-36
அப்பொழுது தான் யாக்கோபு மூன்று விதமான மரக்கோப்புகளை வெட்டி, அவைகளின் பட்டையை உரித்து (காயப்படுத்தி) ஆடுகள் முன்பாக போடுகிறார். பலன், யாக்கோபினிடமிருந்த இருந்த சாதாரண ஆடுகள் அவர் சம்பளமாக கேட்ட மூன்று விதமான குட்டிகளை போட்டது- 37.பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, 38.தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. 39.ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது - ஆதியாகமம் 30:37-39
இப்படியாக வெறும் கோலும் கையுமாய் வந்த யாக்கோபு தேவனுடைய கிருபையினால் விருத்தியடைந்தான் - 40.அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். 41.பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். 42.பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. 43.இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான் - ஆதியாகமம் 30:40-43
இந்த அற்புதத்தை கண்ட லாபான் பத்து முறை சம்பளத்தை மாற்றினாராம், எப்படி என்றால் இந்த முறை புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகள் மாத்திரம் உன் சம்பளம் என்று சொல்லும் பொழுது ஆடுகள் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளை போட்டது, இந்த முறை புள்ளியுள்ளது மாத்திரமே உன் சம்பளம் என்று சொல்லும் பொழுது ஆடுகள் புள்ளியுள்ள குட்டிகளை மாத்திரமே போட்டதாம். இதை குறித்து யாக்கோபு தன் மனைவிகளிடம் சொல்லும் பொழுது தான் மூன்று விதமான மரக்கோப்புகளை வெட்டி போட்டதினால் அல்ல, தான் கண்ட சொப்பனத்தில் ஆடுகள் மேல் அசைவாடின (பொலியும் என்பது சரியான மொழிப் பெயர்ப்பு அல்ல) கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாக இருந்ததினால் தான் இந்த அற்புதம் நடந்தது என்று கூறினான் - 6. என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 7.உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. 8.புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது. 9.இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். 10.ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன் - ஆதியாகமம் 31:6-10
தன் தாய்மாமன் வீட்டில் 14 வருடங்கள் தன் இரண்டு மனைவிகளுக்காக வேலை செய்த யாக்கோபு, அடுத்த ஆரு வருடத்தில் யாக்கோபு அடைந்த ஆசீர்வாதம், லாபானின் குமாரர் பொறாமையடையும் அளவாக மாரி விட்டது, அப்பொழுது தான் தேவன் யாக்கோபினடம் தான் முன்குறித்த இடமாகிய கானான் தேசத்திற்கு, அதாவது இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வர முன்குறித்த இடத்திற்கு போகச் சொன்னார் - 1.பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். 2.லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். 3.கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார் - ஆதியாகமம் 31:1-3
இப்படி யாக்கோபை இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வர முன்குறித்த இடத்திற்கு போகச் சொன்ன தேவன், ஆடுகள் மேல் அசைவாடும் கடாக்கள் கலப்புநிறமும், புள்ளியும், மற்றும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது என்ற ஒரு வாக்குதத்தையும் தருகிறார், இது நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின்(பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) பிள்ளையாக இந்த பூமிக்கு வரப்போகிறார் என்ற இரகசியத்தை வெளிபடுத்துவதற்காக தான் - 11.அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12.அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் (அசைவாடும்) கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். 13.நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான் - ஆதியாகமம் 31:11-13
சிலுவையின் தீர்க்கதரிசனம்
இப்பொழுது யாக்கோபிடம் உள்ள மந்தையானது தேவனால் உண்டானதாய் இருந்தது, அது தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாய் இருந்தது, அதிலிருந்து சிறந்த பகுதியை (தசமபாகத்தை) தான் யாக்கோபு ரோமர்களின் தகப்பனான ஏசாவிடம் கொடுத்தான் - 10.அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. 11.தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான் - ஆதியாகமம் 33:10-11
இது தான் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து யாக்கோபின் சந்ததியில் வந்த பொழுது நடந்தது, பழுதற்ற ஆட்டுக்குட்டியாகிய அவரை ரோமர்களிடம் ஒப்படைத்தார்கள் - அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள் - யோவான் 18:28a
இப்படி ரோமர்கள் முன்குறிக்கப் பட்டவர்களாய் இருந்ததினால் தான் கர்த்தர் இந்த காரியத்தை சொன்னார் - இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார் - யோவான் 19:11