உனக்கு எதிராளியானவன்
இயேசு கிறிஸ்து தன்னுடைய உபதேசத்தில் "உனக்கு எதிராளியானவன்" என்று யாரை குறித்துச் சொன்னார், கர்த்தர் சொன்ன அந்த எதிராளி நம்மை நித்திய நரகமாகிய சிறையில் தள்ள வல்லமையுள்ளவராமே, அந்த எதிராளி யார்? - 54.பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். 55.தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும். 56.மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? 57.நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? 58.உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான். 59.நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 12:54-59
இப்படி எதிராளி என்று கர்த்தர் சொன்னது, இருளின் அதிகாரங்களை குறித்ததாய் இருக்க வாய்ப்பே இல்லை, காரணம், பிசாசை குறித்துச் சொல்லும் பொழுது, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்றே வேதாகமம் சொல்லுகிறது - பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் - யாக்கோபு 4:7
ஆனால் இந்த எதிராளியை குறித்துச் சொல்லும் பொழுது, நாம் இந்த பூமியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவருடன் நல்மனம் பொருந்த வேண்டும் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார், அப்படியென்றால் அந்த எதிராளி யார்? - 21.கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். 23.ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24.அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. 25.எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. 26.பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 5:24-26
நாம் நல்மனம் பொருந்த வேண்டிய அந்த எதிராளி, நாம் அன்றாடம் இடைப்படுகிற மனிதர்களாய் இருக்க வாய்ப்பே இல்லை, காரணம், இந்த உலக மனிதர்களையும் இருளின் அதிகாரங்களையும் குறித்துச் சொல்லும் பொழுது "சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்கள்" என்றே நம் கர்த்தர் சொல்லியிருக்கிறார் - என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள் - லூக்கா 12:4
ஆனால் கர்த்தர், இந்த குறிப்பிட்ட எதிராளியை குறித்துச் சொல்லும் பொழுது, அவர் மரணத்திற்கு பின்பு நம்மை நித்திய நரகமாகிய சிறையில் தள்ள வல்லமையுள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார், அந்த அதிகாரம் உடையவர் ஒருவர் மாத்திரமே - நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 12:5
அப்படியென்றால் நாம் சீக்கிரமாய் நல்மனம் பொருந்த வேண்டியது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமே, அதனால் தான் லூக்காவின் புஸ்தகத்தில், இந்த எதிராளியை குறித்த உவமையை சொல்வதற்கு முன்பு, கர்த்தர் "மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?" என்று தன்னுடைய வருகையை குறித்துச் சொன்னார்.
அப்படியென்றால் இரக்கத்தின் தேவன், தன்னை எதிராளி என்று சொல்ல காரணம் என்ன? நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க வேண்டியதற்கு பதிலாக பிசாசின் பிள்ளைகளாய் இருப்பதே அதற்கு காரணமாய் இருக்கிறது.
அது மாத்திரம் அல்ல, நாம் பிசாசின் காரியங்களை நம்மை விட்டொழித்து, கிறிஸ்துவின் பிள்ளைகளாய் மாறவேண்டும் என்பதற்காக தான் கர்த்தர் இதை சொன்னார், அப்படியென்றால் தேவனை விட்டு நம்மை பிரித்து, நம்மை அவருக்கு எதிராளியாக(அதாவது நரகத்தில் தள்ளுபவராக) மாற்றும் பிசாசின் காரியங்கள் என்ன?
இயேசு கிறிஸ்துவின் மீது அன்பற்ற தன்மை
எத்தருணத்தில் இயேசு கிறிஸ்து இந்த காரியத்தை சொன்னார்? லூக்காவின் புஸ்தகத்தை நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில் அல்லவா சொன்னார், அது ஒரு திரளான கூட்டம் தான், அது ஒரு சபையாக அல்லது ஒரு ஜெபஐக்கியமாக கூட இருக்கலாம், ஆனாலும், அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் மிதிக்கிற ஜனங்களாய் இருந்தார்களாம், "ஒருவரையொருவர் மிதிக்கிற ஜனம்" என்பதில் தான் எவ்வளவு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது? அங்கு சுயம் தான் மேலோங்கி இருந்தது, மற்றவர்களை குறித்த அக்கறை இல்லை, சகோதர அன்புக்கு அங்கு வாய்ப்பே இல்லை, அது இயேசு கிறிஸ்துவின் மீது அன்பில்லாதவர்களின் அடையாளமாகவே இருந்தது, நாம் அப்படிபட்டவர்களாய் இருப்போமானால் தேவன் நமக்கு எதிராளியாக தானே இருப்பார் - அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் - லூக்கா 12:1
இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பவர்கள்
மேலும், அந்த ஜனக்கூட்டத்தில் இயேசு கிறிஸ்துவை தேவன் இல்லை என்கிற உபதேசங்களும் நம்பிக்கைகளும் பெருகியிருந்தனவாம், அதனால் தான் இயேசு கிறிஸ்து முதலாவது தம்முடைய சீஷர்களிடம் தன்னை மறுதலிப்பவர்களுக்கு (அதாவது மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவுக்கு) எச்சரிக்கையாயிருங்கள் என்று சொன்னார், இப்படி தன்னை அப்படிபட்ட மறுதலிப்பவர்களுக்கு தேவன் எதிராளியாக தானே இருப்பார் - 1.அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 2.வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. 3.ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும் - லூக்கா 12:1-3
சரீரத்தைக் கொலைசெய்பவர்கள்
அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் யாரை குறித்து சொன்னார்? அதிகாரத்தில் இருந்த ரோமர்களை குறித்தா சொன்னார்? இல்லையே, மாறாக சகோதர அன்பற்ற ஒருவரையொருவர் மிதிக்கிற ஜனங்களை குறித்து தானே சொன்னார், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், வார்த்தையினால் நித்தமும் கொலைசெய்பவர்கள், அப்படிபட்டவர்களுக்கு தேவன் நமக்கு எதிராளியாக தானே இருப்பார் - 4.என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 5.நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 6.இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. 7.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் - லூக்கா 12:4-7
பரிசுத்த ஆவியானவரை எதிர்ப்பவர்கள்
இப்படி மற்றவர்களை மிதிக்கிற ஜனங்கள், பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லவும் அஞ்சமாட்டார்கள், அப்படிபட்டவர்களுக்கு தேவன் நமக்கு எதிராளியாக தானே இருப்பார் - 8.அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். 9.மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். 10.எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. 11.அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். 12.நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார் - லூக்கா 12:8-12
வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும்
மேலும், நீங்கள் நினையாத நேரத்தில்(திருடன் வருவது போல) மனுஷகுமாரன் வருவார் என்று யாரை குறித்துச் சொன்னார்? - 37.எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 38.அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். 39.திருடன் இன்ன நேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். 40.அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார் - லூக்கா 12:37-40
நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், மற்றவர்களை மிதிக்கிற(வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும் புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்படுகிற) ஊழியக்காரனை குறித்து தானே சொன்னார், அப்படிபட்டவர்களுக்கு தேவன் நமக்கு எதிராளியாக தானே இருப்பார் - 41.அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். 42.அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? 43.எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். 44.தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 45.அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், 46.அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான் - லூக்கா 12:41-46
எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ
ஏன் இந்த ஊழியக்காரனின் நிலைமை, கர்த்தரை அறியாதவர்களின் நிலைமையை காட்டிலும் பரிதாபமாய் முடிந்தது? அதற்கான காரணத்தை குறித்துச் சொல்லும் பொழுது, கர்த்தர் எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும் என்று சொல்லக் காரணம் என்ன? உனக்கு அதிகங் கொடுக்கப்பட்டது, அதனால் அதிகம் கணக்கு காண்பிக்க வேண்டும் என்றால், யார் தான் கணக்கு ஒப்புவிக்க முடியும்?
47.தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். 48.அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன் - லூக்கா 12:47-50
நாம் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் கட்டப்பட்டவர்களாக, எல்லோரோடும் சகோதர அன்போடு பழகி, கர்த்தருடைய ராஜ்யத்திற்காக உழைப்போமானால், நிச்சியமாக இந்த கேள்வி கேட்கப்படாது, அதே சமயத்தில் நாம் நம்மை ஒரு விஷேசித்தவர்களாக (மற்றவர்களை காட்டிலும் அதிகங் கொடுக்கப்பட்டவர்களாக) நினைத்துக் கொண்டு உழைப்போமானால், அங்கு சகோதர அன்பு இருக்கவும் செய்யாது, இயேசு கிறிஸ்துவின் மேலும் அன்பிருக்காது, அப்பொழுது தான் இந்த பரிதாபமான முடிவு.