யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்
தனது அன்பு மகனை இழந்த யாக்கோபு, ஏறக்குறைய 22 ஆண்டுகள் கழித்து அவன் உயிருடன் இருக்கிறான் என்கிற செய்தியை கேட்டவுடனே அவனை பார்க்க எகிப்திற்க்கு செல்லாமல், பெயெர்செபாவுக்குப் சென்று தேவனுக்குப் பலியிட்டான், அப்பொழுது கர்த்தர் யாக்கோபுக்கு சொன்ன காரியங்களில் மூன்றுக் காரியங்கள் இயேசு கிறிஸ்துவுக்கான தீர்க்கதரிசனமாகவே இருந்தது - 1.இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். 2.அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான். 3.அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். 4.நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார் - ஆதியாகமம் 46:1-4
குறிப்பாக "நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்" என்று கர்த்தர் சொன்ன காரியங்கள் யாக்கோபின் வாழ்க்கையில் நிறைவேறினது போல தோன்றினாலும், அது முழுமையாக நிறைவேறாமல் தான் இருந்தது, காரணம் யாக்கோபு எகிப்திலேயே மறித்து போனதினால், அவருடைய மரித்த சரீரம் தான் கானான் தேசத்திற்கு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது.
நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன் என்று சொன்னது, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எகிப்திற்க்கு அழைத்து செல்லப்பட்டதின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது - 13.அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14.அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், 15.ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 2:13-15 & இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் - ஓசியா 11:1
நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன் என்று சொன்னதும் இயேசு கிறிஸ்துவிடம் நிறைவேறினது - 19.ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: 20.நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். 21.அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் - மத்தேயு 2:19-21
யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொல்லப்பட்ட காரியம், ஆதியாகமம் புஸ்தகத்தின் நாட்களிலேயே கர்த்தருக்கு தெரியும் யார் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை கல்லறையிலே வைப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது, அது நமது ஞானத்திற்கு அப்பாற்பட்ட காரியமாகவும் இருக்கிறது - 57.சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, 58.பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59.யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60.தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான் - மத்தேயு 27:57-60