ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம்
யோவான்ஸ்நானன் காலமுதல்
வேதாகமத்தில் ஒவ்வொருவரும் ஒரு தனிசிறப்புள்ள பாத்திரங்களாக பயன்படுத்தப்பட்டதை பார்க்கிறோம், உதாரணத்திற்கு ஏனோஸ், நோவா, ஆபிரகாமை எடுத்துக் கொள்ளலாமே, இதில் ஏனோஸ் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளவதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறார் - ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் - ஆதியாகமம் 4:26
நோவா உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறார் - இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார் - ஆதியாகமம் 9:11
ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பனாகவும், விசுவாசத்திற்க்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறார் - அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் - ஆதியாகமம் 15:6
இப்படி ஏராளமான நபர்கள் வேதாகமத்தில் இருக்கும் பொழுது, இயேசு கிறிஸ்து யோவானை குறித்து இந்த இடத்தில் சொல்லக்காரணம் என்ன? நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் - லூக்கா 16:16
ஏனென்றால் கிறிஸ்தவ ஜீவியத்தின் துவக்கமாக இருக்கிற ஞானஸ்நானத்தை கொடுக்க ஆரம்பித்தது இந்த யோவான்ஸ்நானகனே, இதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தவே இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானனை மேற்கோள் காட்டி பேசினதை பார்க்க முடிகிறது.
அது மாத்திரம் இல்லாமல் இயேசு கிறிஸ்து யோவானை, யோவான்ஸ்நானன் என்று அழைத்து ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினத்தையும் இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது - யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் - மத்தேயு 11:12
ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக
வேதாகமத்தில் யோவான்ஸ்நானன் ஞானஸ்நானத்தை கொடுக்க ஆரம்பித்திருந்தாலும், அது ஒரு மாதிரியேயன்றி வேறொன்றும் இல்லை, நாம் இயேசு கிறிஸ்துன் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் - 1.அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: 2.நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3.அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4.அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5.அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள் - அப்போஸ்தலர் 19:1-5
இப்படி மாதிரியாய் இருந்த யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை உதறினவர்களுக்கே கேடுண்டாகும் என்றால், சிலுவையில் நமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை உதறுவது எவ்வளவு ஆபத்தானது - 29.யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 30.பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள் - லூக்கா 7:29-30