இரையாதே, அமைதலாயிரு!

இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில், மக்கள் வழக்கமாக பிசாசினால் பாதிக்கப்பட்டோரை அவரிடம் கொண்டு வருவதுண்டு, அப்படி கொண்டுவரப்பட்டவர்களிடம் இருக்கும் பிசாசுகளை இயேசு கிறிஸ்து அதட்டி மக்களை குணப்படுத்தினதை வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கலாம் - இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான் - மத்தேயு 17:17-18

ஆனால் இங்கு பிசாசுகளினால் பாதிக்கப்பட்ட ஒருவன் யாருமே நெருங்க முடியாத நிலைமையில், யாரும் அவனை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து கொண்டு வரமுடியாத பரிதாபமான சூழ்நிலையில் இருந்ததை வேதாகமம் இவ்வாறு சொல்லுகிறது - 3.அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. 4.அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. 5.அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான் - மாற்கு 5:3-5

அந்த சூழ்நிலையில் இருந்தவனை தேடி தான் நம் கர்த்தர் பயணம் மேற்கொண்டார், சீஷர்களால் பிசாசு பிடித்தவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதையும், அவனை கட்டி கொண்டு வர முடியாது என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார், அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டானது - 35.அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36.அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. 37.அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38.கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள் - மாற்கு 4:35-38

பலத்த சுழல்காற்றினாலும், மோதிய அலைகளினாலும் பயந்த சீஷர்கள் கர்த்தரிடம் முறையிட்டது உண்மை தான், சீஷர்களுக்கு பலத்த சுழல்காற்றின் சத்தமும், அலைகளின் சத்தம் மாத்திரம் தான் கேட்டது, ஆனால் நம் கர்த்தருக்கோ இன்னோரு சத்தமும் கேட்டு கொண்டிருந்தது, அது வெகு தூரத்தில் கல்லறைகளில் குடியிருந்தவனின் அலறல், அதனால் தான் இயேசு கிறிஸ்து கடலின் சிற்றத்தையும் சுழல்காற்றையும் சேர்த்து அந்த பிசாசுகளையும் "இரையாதே, அமைதலாயிரு" என்று அதட்டினார் -  39.அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40.அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41.அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 4:39-41


இயேசு கிறிஸ்து "இரையாதே, அமைதலாயிரு" என்று அதட்டின சத்தத்திற்கு அடி பணிந்து எழும்பின அலைகள் கடலில் விழுந்து அமைதலாகின, அந்த அலைகளை போலவே கடலில் விழ அந்த பிசாசுகளும் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தன, அதனால் தான் யாராலும் கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தவன், அவனாகவே மலையில் இருந்து இறங்கி கரைக்கு வந்தான் - 1.பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். 2.அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான் - மாற்கு 5:1-2 


இப்படி வெகுதூரத்திலிருந்தே (கடலில் பயணிக்கும் பொழுதே) இயேசு கிறிஸ்து அந்த பிசாசுகளை அதட்டியிருந்ததை தான், அசுத்த ஆவியே புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது - 6.அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு: 7.இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 8.ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார் - மாற்கு 5:6-8


கடைசியாக இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு காற்றும் கடலும் அடிபனிந்த இடத்துக்கே அந்த பிசாசுகளும் சென்று மாண்டு போயின, அது தான் நம் தேவனின் வல்லமை - 9.அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, 10.தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 11.அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. 12.அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 13.இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. 14.பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; 15.இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 16.பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். 17.அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். 18.அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். 19.இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். 20.அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள் - மாற்கு 5:9-20