அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி?

இயேசு செய்த மகத்துவமான காரியங்களை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாது(யோவான் 21:25) என்று சொன்ன பரிசுத்த வேதாகமம் , கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதத்தை மாத்திரம் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என்று நான்கு புஸ்தகத்திலும் சொல்லியிருக்க காரணம் என்ன? மேலும் கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்த அற்புதத்தை மத்தேயு மற்றும் மாற்கு இரண்டு புஸ்தகத்திலும் சொல்லியிருக்க காரணம் என்ன? மேலும், இந்த அற்புதங்களை செய்தப் பின்பு கர்த்தர் தன் சீஷர்களிடம் இத்தனை கேள்விகளை கேட்டதற்கான காரணம் என்ன? அது இந்த அற்புதங்களின் பின் இருக்கிற இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தானே.


உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன?

இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா

இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 

உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா?

காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா?

நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?

நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?

நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?

அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி?


17.இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18.உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19.நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20.நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21.அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் - மாற்கு 8:17-21   

 

சீஷர்களின் நிலைமை

இயேசு கிறிஸ்து இந்த அற்புதங்களை செய்வதற்கு முன்பு தான், சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து சுகமளிக்கும் வரங்களையும் பிசாசுகளைத் துரத்தும் அதிகாரங்களையும் பெற்று தங்கள் முதல் ஊழியத்தை முடித்திருந்தார்கள் - 7.அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8.வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; 9.பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10.பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11.எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12.அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13.அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள் - மாற்கு 6:12-13


ஆனால் பிசாசுகளைத் துரத்தி, எண்ணெய் பூசிச் நோயாளிகளை சொஸ்தமாக்கிவிட்டு வந்த சீஷர்கள், இயேசு கிறிஸ்துவிடம் வந்து, "நீர் செய்த" அற்புதங்கள் என்று நன்றி சொல்லாமல், "தாங்கள் செய்த அற்புதங்கள்" என்றும், "தாங்கள் செய்த உபதேசங்கள்" என்றும் சொன்னார்கள் - அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள் - மாற்கு 6:30



மேலும், சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்று பிரசங்கிக்கும் ஞானமும் தைரியமும் இல்லாதிருந்தது, அதனால் தான் சீஷர்களின் உபதேசத்தை கேட்ட மக்கள், இயேசு கிறிஸ்துவை எலியா என்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்று சொன்னார்கள், ஒரு பயிற்சி ஆசிரியர் சில சிறுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அந்த பயிற்சி முடிந்த பிறகு அந்த சிறுவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டது ஹாக்கி(Hockey) என்று சொன்னால், அது யாருடைய குற்றம்?, அது அந்த பயிற்சி ஆசிரியரின் தவறு தானே, அது போல தான் இங்கும் சீஷர்களின் தெளிவற்ற போதனையினால் தான், அவர்களின் உபதேசத்தை கேட்ட மக்கள் இயேசுவை கிறிஸ்துவை எலியா என்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்று சொன்னார்கள் - 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16.ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:14-16

 

போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது


அதனால் தான் தங்கள் முதல் ஊழியத்தை முடித்து வந்த சீஷர்களுக்கு கர்த்தர் பதில் ஒன்றுமே சொல்லாமல், அவர்களை வனாந்தரமான இடத்திற்கு போஜனம்பண்ண அழைத்து சென்றார். இளைப்பாறுவதும், போஜனம்பண்ணுவதும் நோக்கமாக இருந்திருந்தால், கர்த்தர் சீஷர்களை செழிப்பான இடத்திற்கோ, அல்லது ஒரு பட்டணத்திற்கு தானே அழைத்து சென்றிருக்க வேண்டும். இங்கு போஜனம் என்று சொல்லப்பட்டது நம் ஆவிக்குரிய போஜனத்தை, அதாவது இயேசு கிறிஸ்து தான் ஜீவ அப்பம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற இரட்சிப்பின் போஜனமாகவே இருந்தது, அதற்காகத் தான் கர்த்தர் சீஷர்களை வனாந்தரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார் - அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:31

லூக்கா தனது புஸ்தகத்தில், கர்த்தர் அழைத்து சென்ற வனாந்தரமான இடத்தை குறித்துச் சொல்லும் பொழுது, அது பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்த இடம் என்று குறிப்பிட்டுள்ளார் - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இடத்தை குறித்துச் சொல்லும் பொழுது, அது  திபேரியாவுக்கு நேர் எதிராக இருந்தது என்றும், ஒரு மலை போன்ற இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார் - 1.இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2.அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3.இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார் - யோவான் 6:1-3

அது மாத்திரம் இல்லாமல், கர்த்தர் தன் சீஷர்களை படவில் அழைத்துச் சென்றார் என்று பார்க்கிறோம், காரணம் கப்பர்நகூமுக்கும் அந்த வனாந்தரத்திற்கு இடையே, யோர்தான் நதியானது கடலில் விழுகிறது, அதனால் கடல் பயணமே சாத்தியம் ஆகும், அதே சமயத்தில், வனாந்தரத்திற்கு அப்புறத்தில் இருப்பவர்களால் கால்நடையாய்  நடந்து அங்கு வர முடியும்.


பஸ்காவின் சமயத்தில்

கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தது பஸ்கா பண்டிகையின் நேரமாக இருந்தது, அது இயேசு கிறிஸ்து வரப்போகிற பஸ்கா பண்டிகையின் போது நமக்காக பிட்கப்படுவதை முன்னறிவிப்பதாகவே இருந்தது - அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது - யோவான் 6:4

 

அதுவுமல்லாமல், கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தது, பஸ்காவை ஆசரிக்கக்கூடிய சாயங்கால வேளையாகவும் இருந்தது - 2.குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். 3.இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார் - எண்ணாகமம் 9:2-3



அங்கு வந்திருந்த திரளான கூட்டத்தில் எல்லா வியாதியஸ்தர்களையும் கர்த்தர் சொஸ்தமாக்கினார் என்று பார்க்கிறோம், ஆனால் வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், எல்லோருக்கும் அப்பம் கொடுக்கப்பட்டதை மிகைப்படுத்திச் சொல்லக் காரணம் என்ன? ஏன் என்றால், இந்த அற்புதம் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் பிட்கபடுவதை முன்னறிவிப்பதாய் இருந்தது - 32.அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். 33.அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 34.இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 35.வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகு நேரமுமாயிற்று; 36.புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37.அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 38.அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். 39.அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40.அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். 41.அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42.எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 43.மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44.அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் - மாற்கு 6:31-44

இந்த அற்புதத்திற்குப் பின்பு, கர்த்தர் தம் சீஷர்களை தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி துரிதப்படுத்தினார் என்று சொல்லப்பட்டுள்ளது, இது சீஷர்கள் தான் சுவிஷேத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்னறிவிப்பதாகவும் இருந்தது - 22.இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23.அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் - மத்தேயு 14:22-23

இப்படி தனியாக சென்ற சீஷர்கள் கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்களாம், இதிலிருந்து அவர்களின் பிரயாணம் ஆரம்பத்த இடம் கப்பர்நகூம் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம் - 16.சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17.படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார் - யோவான் 6:16-17

நிச்சியமாகவே சீஷர்களின் கைகளில் மீதம் எடுத்த 12 கூடை அப்பமும் மீனும் இருந்திருக்கும், ஆனால் அவர்களின் இருதயத்தில் ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்து இருந்தாரா என்பது சந்தேகம் தான். அப்பொழுது எதிர்க்காற்றினால் ஏறக்குறைய 6ல் இருந்து 9 மணி நேரம் அலைவுபட்ட படவிலிருந்த 12 கூடை அப்பமும் மீனும் கூட நனைந்து போயிருக்கும், அப்பொழுது மெய்யான அப்பமாகிய  இயேசு கிறிஸ்து வந்து அவர்களை காப்பாற்றினார் - 24.அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. 25.இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26.அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27.உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 28.பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29.அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். 30.காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31.உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32.அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33.அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள் - மத்தேயு 14:24-34

  

இப்படி மெய்யான அப்பமாகிய  இயேசு கிறிஸ்து வந்து அவர்களை காப்பாற்றின பொழுதும், சீஷர்களுடைய  இருதயம் கடினமாகவே இருந்ததாம், அதாவது சீஷர்கள் மெய்யான அப்பமாகிய  இயேசு கிறிஸ்து நம் இருதயத்திற்குள் வந்து வாசம் செய்ய வேண்டும் என்கிற வாஞ்சை இல்லாதவர்களாய் இருந்தார்கள் என்பதை மாற்கு இப்படி எழுதியுள்ளார் - 51.அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52.அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். 53அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள் - மாற்கு 6:51-53

சீஷர்கள் பயணம் செய்ததோ கப்பர்நகூமை நோக்கி, ஆனால் கடைசியில் அவர்கள் சேர்ந்ததோ கெனேசரேத்து நாட்டை, அது போல தான் சீஷர்களும் இயேசு கிறிஸ்து யூத ஜனங்களுக்காக மாத்திரமே வந்தார் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள், ஆனால் இரட்சிக்கப்பட்டதோ புறஜாதி மக்கள் - பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள் - மத்தேயு 14:34


ஒருவேளை சீஷர்கள் கப்பர்நகூமுக்குப் போய் சேர்ந்திருப்பார்கள் என்றால், கப்பர்நகூமின் மக்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு தொட்டிருப்பார்கள் என்பது சந்தேகம் தான், ஆனால் கெனேசரேத்து மக்களோ கர்த்தரை விசுவாசத்தோடு தொட்டு சுகத்தை பெற்றுக் கொண்டார்கள் - 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:35-36

ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்தல்

இதற்கு பின்பு கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்தார், இதிலிருக்கும் இரகசியத்தை ஒரு ஊதாரணத்தோடு பார்த்தால் எளிதாய் புரிந்துக் கொள்ளலாம், மணி என்கிற பிறவி குருடனும், மாணிக்கம் என்கிற ஊமையனும் அந்த கூட்டத்திற்கு சென்றார்கள், இயேசு கிறிஸ்து மணிக்கு பார்வை கிடைக்க செய்தார், மாணிக்கமும் பேச ஆரம்பித்து விட்டார், ஆனாலும் அவர்கள் இருதயம்  திருப்தியடையாமல் இருந்ததாம், ஆனால் மூன்றாவது நாள் இறுதியில் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை சாப்பிட்ட பின்பு தான் அவர்கள் திருப்தியடைந்தார்களாம் -  29.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30.அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31.ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32.பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார். 33.அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். 34.அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35.அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36.அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 37.எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 38.ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள். 39.அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார் - மத்தேயு 15:29-39

கடைசியில் மணியும் மாணிக்கமும் பார்வையடைந்தவராகவும், பேசுகிறவராகவும் தங்கள் கிராமத்திற்கு சென்ற பொழுது, ஊராருக்கு ஒரே ஆச்சரியம், எல்லாரும் இது எப்படி நடந்தது என்று கேட்ட பொழுது, பார்வையடைந்த மணியும், பேசுகிற மாணிக்கமும் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை குறித்து பேச ஆரம்பித்தார்களாம், அதனால் தான் வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், அப்பம் சாப்பிட்டு திருப்தியானதை மிகைப்படுத்திச் சொல்லுகிறது,  ஏன் என்றால் இந்த உலக ஆசீர்வாதங்கள் காட்டிலும் சிலுவையின் அப்பம் விலையேரப்பெற்றது . 

இந்த முறையும் ஜனங்களை போஷித்த பின்பு படவு பயணம் மேற்கொண்ட கர்த்தர், அடுத்தடுத்து இருக்கும் ஊராகிய மக்தலா மற்றும் தல்மனூத்தாவின் எல்லைக்கு வந்து, மெய்யான அப்பமாகிய தன்னை தேடாமல், வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் காண்பிக்கவேண்டும் என்று கேட்ட பரிசேயரையும் சதுசேயரையும் கடிந்து கொண்டு, உடனே பெத்சாயிதாவின் கரை நோக்கி சென்றதை பார்க்கிறோம் -  1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4.இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார் - மத்தேயு 16:1-4

இப்படி பரிசேயரையும் சதுசேயரையும் கர்த்தர் கடிந்து கொண்டதை கண்ட சீஷர்கள், தங்களிடமிருந்த ஏழு கூடை துணிக்கைகளை இது தேவையில்லை தல்மனூத்தாவின் கடற்கரையிலே உதறி விட்டு போனார்களாம், அப்படி சீஷர்கள் தன் உலக காரியங்களை உதறி விட்ட பொழுது அவர்களிடம் ஒரு அப்பம் இருந்ததாம், அது தான் ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்து - 13.அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். 14.சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:13-14

அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி

கடைசியாக தன்னை அண்டிக்கொண்ட சீஷர்களிடம், எப்படி ஐயாயிரம் பேரை போஷிக்க ஐந்து அப்பங்கள் உடைக்கப்பட்டதோ, நாலாயிரம் பேரை போஷிக்க ஏழு அப்பங்கள் உடைக்கப்பட்டதோ, அதோ போல இந்த உலக மக்கள் எல்லோரும் நித்திய ஜீவனை பெற பரலோக அப்பமாகிய தான் சிலுவையில் உடைக்கப்பட வேண்டும் என்கிற இரகசியத்தை "அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி" என்கிற கேள்வியின் மூலமாய் போதித்தார் - 15.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16.அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17.இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18.உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19.நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20.நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21.அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் - மாற்கு 8:13-21

ஆரம்பத்தில் தன்னை எலியா என்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்று மக்கள் சொல்லி கேள்விப்பட்ட சீஷர்கள், இப்பொழுது தன்னை நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கை செய்யும் அளவுக்கு இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை ஆவியில் பலப்படுத்தியிருந்தார் - 13.பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் - மத்தேயு 16:13-16

இப்படி எல்லா உலக காரியங்களையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, எல்லா விதமான மனித ஆலோசனைகளையும் தள்ளிவிட்டு, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கை செய்து, கர்த்தரை முழு மனதோடு அண்டிக்கொள்ளும் பொழுது, பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை என்கிற இரகசியத்தையும் கர்த்தர் சொல்லி கொடுத்தார் - 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20.அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் - மத்தேயு 16:17-20