இங்கே தங்கி, விழித்திருங்கள்
பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கர்த்தருக்குக் காத்திருங்கள், அமர்ந்திருங்கள், ஓய்ந்திருங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது - ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக - யாத்திராகமம் 34:21 & கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு - சங்கீதம் 27:14 & நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன் - சங்கீதம் 46:10
அதேப் போல புதிய ஏற்பாட்டிலும், விசுவாசிகளாகிய நாம் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும், ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது - 42.உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். 43.திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். 44.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள் - மத்தேயு 24:42-44
இதன் அர்த்தத்தை இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தார்? இயேசு கிறிஸ்து தன் சிலுவை பாடுகளுக்கு முன்பு சிஷர்களிடம் இந்த காரியத்தை தான் சொன்னார், அதாவது விழித்திருங்கள் என்று சொன்னார் - 33.பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 34.அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, 35.சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: 36.அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். 37.பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? - மாற்கு 14:33-37
ஆனால் சிஷர்களோ நித்திரையாய் இருந்தார்கள், அப்படி நித்திரைபண்ணுகிற சிஷர்களிடம் வந்த கர்த்தர் விழித்திருங்கள் என்பதின் அர்த்தத்தை விளக்கி ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி கொடுத்தார் - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் - மாற்கு 14:38
அப்படி என்றால், காத்திருங்கள், அமர்ந்திருங்கள், ஓய்ந்திருங்கள், விழித்திருங்கள், ஆயத்தமாயிருங்கள் என்று சொல்லும் போதெல்லாம், கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அது ஆவியில் உற்சாகமாய் எப்பொழுதும் ஜெபம் செய்வது தான்.