எனக்குச் சித்தமுண்டு

ஒருமுறை குஷ்டரோகி ஒருவன் இயேசு கிறிஸ்துவால் தனக்கு சுகம் தர முடியும் என்கிற நம்பிக்கையுடன் அவரிடம் வந்தான், அவன் உபயோகப்படுத்திய வார்த்தைகளும், இயேசு கிறிஸ்துவிடம் உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொன்னதும் பரிசுத்த ஆவியானவரின் செயலாகவே இருந்தது, அந்த குஷ்டரோகியை சுத்தமான ஒருவன் தொட்டு பல வருடங்கள் கூட ஆகியிருக்கும், அவனை இயேசு கிறிஸ்து தொட்டது அவனுக்கு ஒரு பெரிய பூரிப்பை கொடுத்திருக்கும்.


அது மாத்திரம் இல்லாமல், தன்னிடம் வந்த குஷ்டரோகியிடம் எனக்குச் சித்தமுண்டு என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை எவ்வளவு ஆறுதலை கொடுத்திருக்கும், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தன்னிடம் வேண்டிக்கொண்ட ஒருத்தரிடம் கூட நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து எனக்கு சித்தமில்லை என்று சொல்லி வெறுமையாய் அனுப்பவில்லை,  மாறாக தன்னிடம் வந்த அனைவரையும் சுகப்படுத்தி அனுப்பினார் என்பதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம் - 39.கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். 43.அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44.ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45.அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள் - மாற்கு 1:39-45


இப்படி தன்னிடம் வந்த ஒருவரையும் வெறுமையாய் அனுப்பாத தேவன் சொன்ன இந்த வார்த்தை தான் "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்பது -  பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை - யோவான் 6:37


அது மாத்திரம் இல்லாமல் தன்னை ஏற்றுக்கொள்ளாத மக்களும் இரட்சிக்கப்பட்டு பரலோராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கிறவராகவே இருக்கிறார் என்பதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 51.பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, 52.தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53.அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54.அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55.அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56.மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் - லூக்கா 9:51-56