பிசாசின் மேல் அதிகாரம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7.
பிசாசின் மேலுள்ள அதிகாரத்தினால் விளங்கிய இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார், எப்படியெனில், திரியேக தேவனில் வார்த்தையானவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது, அவர் பரிசுத்தஆவியினாலும் பிதாவின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டவராக இருந்தார், இருக்கிறார், வெளிப்படுவார்.
இதில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்துவத்தை, அவருடைய ஊழியத்தின் மூலமாகவும் அறிந்துக் கொள்ளலாம், எப்படியெனில் இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்தும் பொழுது, தன்னிடமிருந்த பிதாவின் வல்லமையினாலும் துரத்தினார் - 17.பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். 18.அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 19.அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள் - லூக்கா 6:17-49
வார்த்தையானவராகவும் துரத்தினார் - 16.அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்: 17.அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 18.பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார் - மத்தேயு 8:16-18
பரிசுத்தஆவியானவராகவும் துரத்தினார் - 22.அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். 23.ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். 24.பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 25.இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26.சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27.நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 28.நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே - மத்தேயு 12:9-88
இப்படி நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவராக மாத்திரம் இல்லாமல், பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் உடையவராக இருந்தார், இருக்கிறார், வெளிப்படுவார், அதனால் தான் நம் கர்த்தர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டார்- 40.சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். 41.பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார் - லூக்கா 4:40-41