சிலுவைப் பாடுகளுக்காக பாடப்பட்ட புலம்பல்
எரேமியாவின் புலம்பல் வேதாகம புஸ்தகங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது, இந்த புலம்பல் புஸ்தகம் எருசலேம் நகரமும் அதிலிருந்த தேவாலயமும் பாபிலோனியரால் தீயிட்டு அளிக்கப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டதினால், இது எருசலேமின் அழிவை குறித்த தீர்க்கதரிசன புஸ்தகம் என்கிற பொதுவான கருத்து உண்டு, அதனால் இன்றளவும் எருசலேம் அழிக்கப்பட்டதை நினைவு கூரும் நாட்களில் இந்த புலம்பல் புஸ்தகத்தின் பாடல்களை இஸ்ரவேல் தேசத்தில் பாடுவதுண்டு.
புலம்பல் புஸ்தகத்தை குறித்த இந்த அபிப்பிராயம் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை, ஏனென்றால் எருசலேமின் அழிவை குறித்து கர்த்தர் எரேமியாவிடம் சொல்லும் பொழுது, அதற்காக புலம்ப கூடாது என்றும் சொல்லியிருந்தார், அப்படியிருக்கும் பொழுது எரேமியா எப்படி எருசலேமுக்காக புலம்பியிருப்பார் - 3.இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 4.மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். 5.ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் - எரேமியா 16:3-5
இன்னும் அக்காலத்தின் புலம்பல் பாடும் கலாச்சாரத்தை ஆராய்ந்துப் பார்ப்போமானால், புலம்பல் என்பது ஒருவரின் மரணத்தினாலுண்டாகும் தாங்கி கொள்ள முடியாத துக்கத்தினால் பாடப்படும் பாடலாகும், இதில் புலம்பல் பாடுபவர்கள் அதில் அனுபவம் உள்ளவர்களாகவும், அதின் விதிமுறைகளின் படி பாடுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் - 17.நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 18.அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள். 19.எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். 20.ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். 21வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது. 22மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தாரென்று சொல் - எரேமியா 9:17-22
இதில் முக்கியமான விதிமுறை என்னவென்றால், புலம்பல் பாடுவோர் யாருக்காக துக்கம் கொண்டாரோ அவரின் பெயரை உச்சரிக்காமல் அடைமொழிகளை மாத்திரமே பயன்படுத்துவேண்டும, உதாரணத்திற்கு ஒரு மன்னனின் மரணத்திற்கு புலம்பல் பாடுவோர், மன்னனின் பெயரை சொல்லமால் அரனே, கோட்டையே, தங்கமே, கிரீடமே என்று தான் பாட வேண்டும், அப்படி பார்க்கும் பொழுது எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்தில் எருசலேமின் பெயர் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது, இதிலிருந்து எரேமியா புலம்பல் பாடினது எருசலேமுக்கு அல்ல, மாறாக எருசலேமை அடைமொழியாக கொண்ட ஒரு நபருக்காக பாடப்பட்டது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள் - புலம்பல் 1:7
இதைத்தான் இராஜாக்களின்புஸ்தகமும் நாளாகமத்தின் புஸ்தகமும் உறுதிப்படுத்துகிறது, அதாவது எரேமியா புலம்பல் பாடினது எருசலேமுக்காக அல்ல, மாறாக எருசலேமிலிருந்து ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டிருந்த யோசியா ராஜாவுக்காக என்று, அதனால் தான், எரேமியா யோசியாவின் பெயரை பயன்படுத்தப்படமால், மறியாதையின் நிமித்தமாக அடைமொழிகளை கொண்டு யோசியா ராஜாவின் மரணத்திற்கு புலம்பல் பாடியிருந்தார் - 28.யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 29.அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். 30.மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் - II இராஜாக்கள் 23:28-30a & 25.எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது - II நாளாகமம் 35:20-25
இந்த புலம்பல் வேதாகமத்தில் இடம் பெற காரணம் என்ன?
இப்படி யோசியா ராஜாவின் மரணத்திற்க்காக எழுதப்பட்ட புலம்பல் புஸ்தகத்தை குறித்து பல கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது, முதலாவது தேவனால் ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்ட எரேமியா, ஏன் யோசியா ராஜாவின் மரணத்திற்காக புலம்பல் புஸ்தகத்தை எழுதினார்? - 4.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 5.நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார் - எரேமியா 1:4-5
தேவன் ஏன் இந்த புலம்பல் புஸ்தகத்தை பாதுகாத்து வேதாகமத்தில் இடம் பெறச்செய்தார்? மேலும், இந்த புலம்பல் புஸ்தகம் எந்த ஒரு முன்னுரையும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன? யோசியா ராஜாவின் மரணத்திற்க்காக எரேமியா பாடின புலம்பல் என்று ஒரு முன்னுரை கொடுத்திருந்தால் இவ்வளவு கேள்விகள் எழும்பியிருக்காதே.
அது மாத்திரம் இல்லாமல் எருசலேமுக்காகவும் தேவாலயத்துக்காகவும் புலம்பிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து தேவன் கேட்ட கேள்வி, இந்த புலம்பல் புஸ்தகம் கிறிஸ்துவுக்காக எழுதப்பட்டதோ என்று ஐயப்படும் படியாகவே இருந்தது - 4.அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 5.நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்? - சகரியா 7:4-5
மெகிதோவின் புலம்பலை தீர்க்கதரிசன புஸ்தகமாக மாற்றிய சகரியா
இப்படி தீர்க்கதரிசியாகிய எரேமியா எழுதின புலம்பல் புஸ்தகத்தை, ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்து வந்த தீர்க்கதரிசியாகிய சகரியா ஒரு தீர்க்கதரிசன புஸ்தகமாக மாற்றினார், எப்படியென்றால் மெகிதோவின் புலம்பலைப்போல எருசலேமில் ஒரு பெரிய புலம்பல் இருக்கப்போவதை தீர்க்கதரிசினமாக உரைத்தார், அதாவது மெகிதோவிலே யோசியா ராஜா கொல்லப்பட்டதுப்போல எருசலேமிலே ஒரு நீதியின் ராஜா கொல்லப்பட போவதை வெளிப்படுத்தினார் - 10.நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். 11.அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். 12.தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 13.லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 14.மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள் - சகரியா 12:10-14
இப்படி சகரியா தீர்க்கதரிசனம் உரைத்து, ஏறக்குறைய 400 ஆண்டுகள் கழித்து எருசலேமில் ஒரு பெரிய புலம்பல் உண்டாயிற்று, அது நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்ட கொடூரமான சிலுவை மரணத்தினால் உண்டாயிற்று - 24.அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, 25.கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். 26.அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள் - லூக்கா 23:24-27
புலம்பல் புஸ்தகத்திலுருந்து சில தீர்க்கதரிசனங்கள்
இப்படி யோசியா ராஜாவுக்காக எரேமியா பாடின புலம்பல், முழுக்க முழுக்க இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்காக எழுதப்பட்ட புலம்பலாகவே இருக்கிறது, அதிலிருந்து சில காரியங்களை பார்ப்போம்.
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள் - புலம்பல் 1:2
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக - புலம்பல் 3:30
அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை - புலம்பல் 2:9
குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது - புலம்பல் 4:14-15
அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள். இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று - புலம்பல் 4:7-8
சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள் - புலம்பல் 1:17
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்? - புலம்பல் 2:13
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள் - புலம்பல் 1:21
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள் - புலம்பல் 2:15-16
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார் - புலம்பல் 2:1
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள் - புலம்பல் 1:10
பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார். நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார். நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார் - புலம்பல் 3:6-9
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே - புலம்பல் 4:20
புலம்பல் புஸ்தகத்தின் வரலாறு
இந்த புலம்பல் புஸ்தகம் நீண்ட வரலாறு கொண்டதாக இருக்கிறது, எப்படியெனில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன்பு, யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி யோசியா ராஜாவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார் - 1.யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, 2.அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; 3.அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான் - I இராஜாக்கள் 13:1-3
இப்படி யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்து, ஏறக்குறைய 300 ஆண்டுகள் கழித்து பிறந்தவர் தான் யோசியா ராஜா, இவர் கர்த்தருடைய பார்வையில் செம்மையான காரியங்களை செய்ததால், தேவனை நேசிக்கும் எரேமியா போன்ற தீர்க்கதரிசிகளுக்கு பிரியமான ராஜாவாக தான் இருந்திருப்பார் - 15.இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரத் தோப்பையும் சுட்டெரித்தான். 16.யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான் - II இராஜாக்கள் 23:15-16
இப்படி கர்த்தருடைய பார்வையில் செம்மையான காரியங்களை செய்த யோசியா கொல்லப்பட்ட பொழுது தாங்கொண்ணா துயரத்தால் எரேமியா பாடின பாடல் தான் புலம்பல் புஸ்தகம் - எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது - II நாளாகமம் 35:25
இந்த எரேமியாவின் காலத்திற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்து, பாபிலோனிலிருந்து வந்த இஸ்ரவேல் மக்கள் மத்தியில் ஊழியம் செய்த சகரியா தீர்க்கதரிசி, எரேமியாவின் புலம்பல் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவுக்காக எழுதப்பட்டது என்ற இரகசியத்தை வெளிப்படுத்தினார் - அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும் - சகரியா 12:11
இப்படி சகரியா தீர்க்கதரிசனம் உரைத்து ஏறக்குறைய 400 ஆண்டுகள் கழித்து எருசலேம் நகரில் பாவமறியாத ஆட்டுகுட்டியான இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். இப்படி எரேமியாவின் புலம்பல் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவுக்காக எழுதப்பட்டதினால் தான், தேவன் அதை பாதுகாத்து வேதாகமம் புஸ்தகத்தில் இடம் பெறச்செய்தார், இப்படி ஒரு இரட்சிப்பை யார் நமக்கு தரக்கூடும் - நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் - கலாத்தியர் 6:14
இது ஆமோஸ் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதலாகவே இருந்தது - 16.ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். 17.எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் - ஆமோஸ் 5:16-17