இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்

கிறிஸ்தவ ஜீவியத்தில், அதாவது தேவனுடைய ராஜ்ஜியத்திற்க்காக தயாராகி கொண்டிருக்கும் எல்லோரும் தேவனிடத்திலிருந்து பெற வேண்டிய முக்கியமான அறிக்கை என்னவென்றால் "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்பதாகும், இதை நாம் எப்படி பெற்றுக் கொள்வது? இதை நாத்தான்வேல் எப்படி தேவனிடத்திலிருந்துப் பெற்றுக் கொண்டார்?


நாத்தான்வேல் நம்மைப்போல் ஒரு பாடுள்ள மனுஷன் தான், ஆனால் தேவ குமாரனுக்காக காத்துக் கொண்டிருந்த அவர் எல்லோர் முன்பும் இயேசுவை ரபீ (ஆலோசனை சொல்லி நடத்துகிறவர்) என்றும், தேவனுடைய குமாரன்(தேவன்) என்றும், இஸ்ரவேலின் ராஜா(என்னை ஆளுகிறவர்) என்றும் அறிக்கை செய்கிற இருதயம் உள்ளவராக இருந்தார்,  அதனால் தான் இருதயத்தை ஆராய்ந்து அறிகிற தேவனிடத்திலிருந்து "கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

45.பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். 46.அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். 47.இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48.அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49.அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51.பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - யோவான் 1:45-51

கிறிஸ்தவ ஜீவியத்தில் நாமும் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவை, ஆலோசனை சொல்லி நடத்துகிறவர் என்றும், தேவன் என்றும், என்னை ஆளுகிறவர் என்றும் அறிக்கை செய்கிற இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.