இயேசு கிறிஸ்துவே தேவன்

 இயேசு கிறிஸ்து தான் ஒருவரே தேவன் என்று தன்னை குறித்து ஏவ்விடத்திலாவது கூறியிருக்கிறாரா என்று வேதத்தை ஆராய்பவர்கள் உண்டு, ஒரு குடும்பத்தில் தாயானவள் தன் பிள்ளைகளிடம், தினம் காலையில் எழுந்தவுடன் நான் தான் உங்கள் தாய்  என்று அறிமுகப்படுத்திக் கொள்வாளோ? இல்லையே. ஆனால் அவளின் செயல்பாடுகள், அவள் தான் தாய் என்பதை வெளிக்காட்டி விடும் - இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது - யோவான் 10:23-24



அப்படித்தான் இயேசு கிறிஸ்துவும் இந்த பூமிக்கு வந்த பொழுது தன்னை குறித்து அதிகமாய் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவரின் செயல்பாடுகளும், குணாதிசயங்களும் அவர் தான் நம்மை படைத்த சர்வ வல்லமை பொருந்திய தேவன் என்பதை விளங்க செய்கிறது. இப்படி இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகளும், குணாதிசயங்களும் அவர் சர்வ வல்லமை பொருந்திய தேவன் என்று வெளிப்படுத்தினதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.



உதாரணத்திற்கு தேவனுடைய ஒரு குணாதிசயத்தை எடுத்துக் கொள்வோம், தேவன் தன்னைக் குறித்துப் பெருமை பாராட்டாதவர் என்பது இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு குணாதிசயமாகும், மனிதர்கள் தாங்கள் உருவாக்கும் பொருட்களின் மேல் தங்களின் பெயரையோ அல்லது முத்திரையையோ போடுவதுண்டு,  ஆனால் தேவன் தன்னுடைய படைப்புகளில் ஒரு இடத்தில கூட தன்னுடைய பெயரைப் போடாததற்கு காரணம், அவர் பெருமையை வெறுக்கிற தேவனாய் இருக்கிறார் என்பதே, உலகம் அறிந்த இந்த குணாதிசயத்தை தான் இந்த வசனங்களில் நாம் இயேசு கிறிஸ்துவிடம் பார்க்கிறோம் - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். 43.அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு - மாற்கு 1:40-42



இப்படி நம் தேவன் பெருமை பாராட்டத்தவர் என்பதையும், இந்த குணாதிசயத்தை   நாம் இயேசு கிறிஸ்துவிடம் காண முடியும் என்பதை தான் ஏசாயா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார் - 15.இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, 16.தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 17.ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: 18.இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19.வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை - மத்தேயு 12:15-19