இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தின் துவக்கத்தில், ஒரு குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது, இந்த உலகத்தில் எந்த மனிதனாலும் செய்ய கூடாத காரியமாய் இருக்கிறது - 1.அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3.இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4.இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார் - மத்தேயு 8:1-4
ஒரு குஷ்டரோகியை தொட்டால், தொட்டவர்கள் தீட்டாகி விடுவார்கள் இது தான் உலகம் அறிந்தது, ஆனால் இங்கு இயேசு கிறிஸ்து அந்த குஷ்டரோகியை தொட்ட பொழுது காரியம் மாறுதலாய் முடிந்தது, கர்த்தரிடமிருந்த புறப்பட்ட பரிசுத்தம் அந்த குஷ்டரோகியை சுத்தமாக்கி விட்டது - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் - மாற்கு 1:40-42
இந்த அற்புதத்தின் முக்கியதுவத்தை அறிவுறுத்தவே, இது மூன்றாம் சுவிஷேச புஸ்தகமாகிய லூக்காவிலும் சொல்லப்பட்டுள்ளது, அதே சமயத்தில், இந்த அற்புதத்திற்க்கு பின்பு கர்த்தர் சுகமானவனிடம் "நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல்" என்று கேட்டுக் கொண்டும் "அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று" என்று லூக்கா தன்னுடைய சுவிசேஷ புஸ்தகத்தில் எழுதியுள்ளார் - 12.பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 13.அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. 14.அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். 15.அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள் - லூக்கா 5:12-15
அந்த குஷ்டரோகியை குணமாக்கி, இவ்வளவு பெரிய அற்புதத்தை செய்த கர்த்தர், அந்த சுகமானவனுக்கு இட்ட கட்டளையை அவன் செய்யாமல், கர்த்தரை பிரபலப்படுத்தினத்தினால், கர்த்தர் வனாந்திரத்தில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக மாற்கு தன்னுடைய சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் - 43.அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44.ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45.அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள் - மாற்கு 1:43-45
இது எப்படி நடந்திருக்கும், உதாரணத்திற்கு ஒரு சிறை கைதியை ஒரு அதிகாரி சந்தித்து நான் உனக்கு விடுதலை வாங்கி தருகிறேன், நீ இந்த சின்ன காரியத்தை செய்தால் போதும் என்றால், அந்த சிறை கைதி அந்த காரியத்தை செய்ய எவ்வளவாய் பிரயாசப்படுவான், இங்கு அந்த குஷ்டரோகியின் நிலைமை ஒரு சிறை கைதியை காட்டிலும் மிக மோசமாகவே இருந்தது, அப்படி இருக்கும்போது அந்த குஷ்டரோகி கர்த்தர் சொன்னதை நிறைவேற்ற இவ்வளவாய் பிரயாசப்பட்டு இருப்பான், ஒருவேளை அந்த கிராமத்தை சேர்ந்த ஆசாரியரிடம் போய் காண்பித்து இருப்பான், ஆனால் கர்த்தரோ நான் சொன்னது இது அல்ல என்று சொல்லி இருக்கலாம், அதற்குப் பின்பு அவன் அந்த பட்டணத்தை சேர்ந்த ஆசாரியரிடம் போய் காண்பித்திருக்கலாம், அப்பொழுதும் கர்த்தர் நான் சொன்னது இது அல்ல என்று சொல்லி இருக்கலாம், இப்படியாக அவன் ஒவ்வொருவரிடமாக காண்பித்து இறுதியில் கர்த்தரை பிரசித்தம் பண்ணுகிறவனாகவே மாறி விட்டான்.
இப்படி கர்த்தர் சொன்ன "நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை செலுத்து" என்பதின் அர்த்தத்தை சீஷர்களும் அறிந்துக் கொள்ள முடியாமல் இருந்த பொழுது தான், பத்து குஷ்டரோகிகள் சுகத்திற்காக இயேசு கிறிஸ்துவிடம் வந்தார்கள், அவர்களிடமும் கர்த்தர் "நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்" என்று சொன்னதை வேதாகமத்தில் பார்க்கிறோம், இதைக் கேட்ட சீஷர்கள் ஒரு குஷ்டரோகியிடம் "நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பி" என்று சொன்னதினிமித்தம் நாம் பல நாட்கள் வனாந்தரமான இடங்களில் தங்க நேர்ந்ததே, இப்பொழுது கர்த்தர் பத்து குஷ்டரோகிகளிடம் "நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்" என்று சொல்லுகிறாரே, இது என்னவாய் முடியுமோ என்று கவலை அடைந்திருப்பார்கள் - 11.பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12.அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13.இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14.அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள் - லூக்கா 17:11-14
ஆனால் அந்த பத்து குஷ்டரோகிகளில், ஒருத்தனுக்கு உலக ஆசாரியர்களிடம் போக விருப்பமில்லை, இந்த உலக ஆசாரியர்களிடம் போனால், அவர்கள் என் பழைய காரியங்களை குறித்து விசாரிப்பார்கள், உன்னுடைய பாவ வாழ்க்கை தான் இதற்கு காரணம் என்றும் சொல்லுவார்கள், தூரத்தில் இருந்தவாறே என் சரீரத்தை பார்த்து, நான் உண்மையிலேயே சுகமடைந்து விட்டேனா என்று சோதித்துப் பார்பார்கள், நான் ஏன் அவர்களிடம் போக வேண்டும்? என்று தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டு, என் பழைய காரியங்களை குறித்து எதுவுமே விசாரிக்காமல் என் மீது கருணை வைத்த அவரிடமே போவேன் என்று சொல்லிக்கொண்டு இயேசுவிடம் வந்தான் என்று பார்க்கிறோம் - 15.அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16.அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான் - லூக்கா 17:15-16
அப்பொழுது இயேசு சொன்ன பதில், நெடுநாளாய் அவர்கள் தேடிக்கொண்டிருந்த "ஆசாரியர்" அவர் தான் என்பதை புரிந்துக் கொள்ளச் செய்தது, மேலும் அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதையும் விளங்கச் செய்தது - 17.அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18.தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, 19.அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் - லூக்கா 17:15-19
இயேசு கிறிஸ்து "நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்" என்று சொன்னது, நாம் பிரதான ஆசாரியராகிய அவரையே அண்டிக் கொள்ள வேண்டும் என்பதாய் இருந்தது, மேலும் கர்த்தர் "மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து" என்று சொன்னது, அவருக்கே நாம் துதி கணம் மகிமையை செலுத்த வேண்டும் என்பதாய் இருந்தது, அவரே தன் ஜீவனை கொடுத்து நம்மை மீட்டவர் - 21.ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, 22.அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். 23.அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 24.இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். 25.மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். 26.பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 27.அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார் - எபிரெயர் 7:21-27