நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
வேதாகமத்தில் கர்த்தருக்கென்று பரிசுத்த அபிஷேக தைலத்தை எப்படி செய்வது என்றும், அந்த பரிசுத்த அபிஷேக தைலத்தை வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்த கூடாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது, யாராவது இந்த அபிஷேக பொருட்களை மனிதருடைய சரீரத்தின்மேல் வார்த்தாள், அவன் நரக ஆக்கினைக்கு பாத்திரனாகி விடுவான் என்றும் குறிக்கப்பட்டுள்ளது - 22.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 23.மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், 24.இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, 25.அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது. 26.அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், 27.மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும், 28.தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, 29.அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும். 30.ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. 31.இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். 32.இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 33.இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார் - யாத்திராகமம் 30:22-33
ஒருவேளை மற்றவர்களுக்கு இந்த அபிஷேக பொருட்கள் ஒரு சாதாரணமான பொருளாக இருந்திருக்கலாம், ஆனால் ஆசாரிய ஊழியம் செய்பவர்களுக்கும், வேதத்தை அறிந்தவர்களுக்கும் இந்த பரிசுத்த அபிஷேக தைலமும் மிகவும் விலையேறப்பெற்றதாகவும், தேவனுக்குரியதாகவும் கருதப்பட்டது. இது போன்ற சத்தியங்களை சொல்லி கொடுப்பது தான் இஸ்ரவேலின் போதகர்களுக்கு முக்கிய பணியாக இருந்தது, நிக்கொதேமுவும் அப்படிபட்ட ஒரு போதராகவும் வயது முதிர்ந்தவராயுமிருந்தார். இந்த நிக்கொதேமு ஒரு நாள் இராக்காலத்தில் இயேசுவினிம் வந்தாராம், இயேசுவின் மேல் எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததினால் தான் அவர் இராக்காலத்தில் இயேசுவைக் காண சென்று இருந்து இருக்க வேண்டும், அப்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மரணத்தை குறித்து முதல் முறையாக வெளிப்படையாக சொன்னதுமன்றி, "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா" என்றும் கேட்டார் - 1.யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2.அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4.அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5.இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6.மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7.நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8.காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். 9.அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10.இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? - யோவான் 3:1-10
அது மாத்திரம் அல்ல, நித்தியஜீவனை சுதந்தரித்து கொள்ள நாம் மெய்யான ஒளியாகிய இயேசுவிடம் வர வேண்டும் என்றும் இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவுக்கு சொல்லி கொடுத்தார் - 11.மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை. 12.பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13.பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. 14.சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15.தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16.தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17.உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18.அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19.ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20.பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21.சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார் - யோவான் 3:11-21
பின்பு ஒருமுறை இயேசுவின் ஊழியத்தில் எதிர்ப்புகள் வலுத்து அவரை கைது செய்ய முயற்சி செய்த பொழுது, அன்று இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்த நிக்கொதேமு, இன்று வெளிப்படையாக இயேசுவுக்காக வாதாடுகிறவராக இருந்தார், அது மட்டும் இல்லாமல் இயேசுவினால் இரட்சிப்பு உண்டு என்பதை அறிந்தவராக இயேசு எப்படி ஊழியத்தை முடிக்க போகிறார் என்பதை அறியும் வரை காத்திருக்குமாறு அறிவுரையும் சொன்னார் - 45.பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். 46.சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். 47.அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? 48.அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? 49.வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். 50.இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: 51.ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். 52.அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். 53.பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள் - யோவான் 7:45-53
இப்படி இயேசுவின் மேல் விசுவாசம் வைத்துதிருந்த நிக்கொதேமுவுக்கு, இயேசு பாடுபட்ட விதமும் அவரின் அகாத மரணமும் தாங்க முடியாத துக்கத்தை கொடுத்து இருக்கும், அப்பொழுது தான் இயேசு "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" என்று கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது, மோசேயின் ஆகமத்தில் கர்த்தருக்கு என்று சொல்லப்பட்ட பரிசுத்த அபிஷேக தைல பொருட்களுடன் கல்வாரியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ஆனால் அதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்து இருக்கும், ஏன் என்றால் மோசேயின் ஆகமத்தின் படி அந்த பரிசுத்த அபிஷேக தைலத்தை மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்க கூடாது, அப்படி வார்த்தால் அது மிகப்பெரிய சாபமாக முடிந்து விடும், அதனால் அவருடைய வீட்டிலும் கூட எதிர்ப்புகள் இருந்து இருக்கும். அது மட்டும் இல்லாமல், நிக்கொதேமு இயேசுவின் அடக்கத்திற்கு சென்றால், அடக்க காரியம் தீட்டாக கருதப்பட்டதால், அவர்கள் வருடத்தின் மிகமுக்கிய பண்டிகையாகிய பஸ்காவை கொண்டாட முடியாது.
அந்த சூழ்நிலையில் தான் நிக்கொதேமு தன்னுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தினார், இந்த பரிசுத்த அபிஷேக தைலத்தை நான் மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்க அல்ல, மாறாக தேவனுடைய சரீரத்தின்மேல் வார்க்க போகிறேன் என்று சொல்லி கல்வாரியை நோக்கி நடக்க ஆரம்பித்தார், தேவனுக்கு என்று சொல்லப்பட்ட பரிசுத்த அபிஷேக தைல பொருட்களுடன் இயேசுவின் சரீரத்தை சீலைகளில் சுற்றிக் கட்டி, இவர் தான் மெய்யான பஸ்காவின் ஆட்டுகுட்டி என்று தன் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார் - 38.இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். 39.ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். 40.அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். 41.அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42.யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள் - யோவான் 19:38-42
இந்த வெள்ளைப்போளம் (MYRRH) வனாந்திரத்தில் காணப்படும் எதற்கும் பயன்படாது என்று தோன்றும் முட்கள் உள்ள மரத்தின் பிசினில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது, பார்த்தால் எதற்கும் பயன்படாது என்று தோன்றும் மரத்திலிருந்துதான் தேவனுக்கு உபயோகமான வெள்ளைப்போளம் கிடைக்கிறது, இதன் மதிப்பு தங்கத்தை விட விலையேறப்பெற்றதாக கருதப்படுகிறது, ஒருவேளை உலகம் உங்களை எதற்கும் பயனற்ற நபராக பார்க்கலாம், கர்த்தருக்கு காத்திருங்கள், உங்களை நறுமணம் தரும் பாத்திரமாக மாற்ற இயேசு கிறிஸ்துவினால் கூடும்.