மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று
மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கிற நம்பிகையை, அதாவது அவர் மேல் நாம் வைக்கிற விசுவாசத்தை உருவாக்குவதும் இயேசு கிறிஸ்து தான் அதை உறுதிப்படுத்துவதும் இயேசு கிறிஸ்து தான் என்று வேதாகமம் சொல்லுகிறது - ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் - எபிரெயர் 12:1
அது மாத்திரம் இல்லாமல், எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் அவர் மேல் எவ்வளவாய் விசுவாசமாய் இருக்கிறோம் என்பதையும் அவர் அறிந்தவராக இருக்கிறார், இப்படி நாம் அவர் மேல் வைத்திருக்கிற விசுவாசமே அவரோடு நம்மை இணைந்திருக்கச் செய்கிறது - விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் - எபிரெயர் 11:6
நாம் இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிற விசுவாசமே நம்மை அவரோடு நெருங்க செய்கிறது, அதே சமயத்தில் அவிசுவாசிகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இயேசு கிறிஸ்து விளக்கி காட்டிய விதம் இன்னும் ஆச்சரியமாகவேயுள்ளது.
அது எப்படி என்றால், இயேசு கிறிஸ்து தன்னை விசுவாசிக்காத ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியிலிருந்து மறைந்து போனார் - 35.அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37.அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை - யோவான் 12:35-37
இப்படி ஒரு கூட்ட மக்களின் மத்தியிலிருந்து மறைந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாள், ஒரு ஸ்திரீயின் விசுவாசத்தினிமித்தம் அவரால் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று என்று வேதாகமம் விசுவாசத்தின் மகத்துவத்தை கூறுகிறது - 24.பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. 25.அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள் - மாற்கு 7:24:26
அதிலும், இயேசு கிறிஸ்து தானிருந்த கலிலேயாவிலிருந்து தீரு சீதோன் வரை சென்று மறுபடியும் தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய் கலிலேயா வர ஏறக்குறைய 175 கிமீ தூரம் நடக்க வேண்டும், அந்த பயணத்தில் இயேசுவை சந்தித்த ஒரே நபர் யாரென்றால் ஒரு சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ மாத்திரமே, அப்படியென்றால் அந்த ஸ்திரீயின் விசுவாசம் தான் இயேசு கிறிஸ்துவை அவ்வளவு தூரம் நடக்க வைத்தது என்றால், நம் விசுவாசம் தேவனுடைய பார்வையில் எவ்வளவு விலையேறப் பெற்றதாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் - 7.அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 8.அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, 9.உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள் - I பேதுரு 1:7-9