நாத்தான்
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுவுருவெடுக்க தெரிந்துக் கொண்ட வம்சத்தை வம்சவரலாறு இல்லாதவரின் வம்சவரலாறு என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இதில் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வரப்போவதை குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்லும் பொழுது, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார், அதனால் எல்லோரும் சாலொமோன் ராஜாவின் வம்சத்தில் தான் மேசியா வரப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் இயேசுகிறிஸ்துவை கருவில் சுமக்கும் பாக்கியம் நாத்தானின் வம்சத்தில் வந்த மரியாளுக்கு கொடுக்கப்பட்டது - 13.அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் - ஏசாயா 7:13-14
இப்படி எல்லோரும் மேசியா வரப்போகிறார் என்று சாலொமோனின் வம்சத்தை குறித்து மேன்மை பாராட்டி கொண்டிருந்த பொழுது, சகரியா தீர்க்கதரிசி தாவீதின் இன்னொரு மகனான நாத்தானின் குடும்பம் புலம்ப போவதை குறித்து தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார் - 12.தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 13.லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 14.மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள் - சகரியா 12:12-14
இப்படி சகரியா தீர்க்கதரிசி சொன்ன காரியம், நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து சிலுவை அறியப்பட்ட பொழுது நிறைவேறிற்று - 25.இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:25-27