மரியாளைக் காட்டிலும் அதிக பாக்கியவான்களாக
இயேசு கிறிஸ்துவை கருவில் சுமந்த மரியாளை ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும் பாக்கியவதி என்றும் வேதாகமம் சாட்சி கொடுத்ததை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம், இதை தவறாக புரிந்துக் கொண்டு மரியாளை தெய்வமாக மாற்றினவர்களும் உண்டு, ஆனால் வேதாகமம் மரியாளை தெய்வம் என்று சொல்லாமல், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், தேவனை விசுவாசித்ததாள் பாக்கியவதியானவள் என்றே சொல்லுகிறது - 41.எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, 42.உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43.என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, 44.இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. 45.விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள் - லூக்கா 1:41-45
ஆனால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி நாம் நடக்கும் பொழுது ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொல்லப்பட்ட மரியாளை காட்டிலும் அதிக பாக்கியவான்களாக இருக்கிறோம் - 27.அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். 28.அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார் - லூக்கா 11:27-28
அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் எவ்வளவு விசேஷித்தவைகள், அவைகள் ஒவ்வொன்றும் பரலோக தேவனின் வார்த்தைகளாகவே இருக்கின்றன - 8.நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9.நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே - யோவான் 17:8-9
அது மாத்திரம் இல்லாமல் இயேசு கிறிஸ்துவினால் அருளப்பட்ட பரலோக தேவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், நமக்காகவே கொடுக்கப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன - 14.நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15.நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் - யோவான் 17:14-15
அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் என்ற தலைப்பில் கர்த்தரின் வார்த்தையின் மகத்துவங்களை குறித்து தியானிக்கிறோம்.