பத்சேபாள்
தாவீது ராஜாவுக்கு பல மனைவிகளும், அந்த மனைவிகளின் மூலமாக ஏராளமான குமாரர்கள் இருந்த போதிலும், இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றில், தந்தை வழிக்கான பாக்கியத்தை பத்சேபாளின் ஒரு குமாரனான சாலொமோனும், தாய் வழிக்கான பாக்கியத்தை பத்சேபாளின் இன்னொரு குமாரனான நாத்தானும் பெற்றுக்கொண்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, இது எப்படி சாத்தியம் ஆகும்? தாவீது ராஜாவின் மற்ற எல்லா மனைவிகளைக் காட்டிலும் பத்சேபாளிடத்தில் காணப்பட்ட சிறந்த குணம் தான் என்ன?
தாவீது ராஜா ஏத்தியனாகிய உரியாவை கொலை செய்து, அவன் மனைவியாகிய பத்சேபாளை திருமணம் செய்து கொண்டபொழுது, தீர்க்கதரிசியான நாத்தான் தாவீதை கடிந்துக்கொண்டார் - 7.அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, 8.உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். 9.கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். 10.இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் - II சாமுவேல் 12:7-10
இப்படி தன்னை கடிந்துக்கொண்ட நாத்தானை குறித்து தாவீதும் தனது சங்கீதத்தில் சொல்லியிருந்தார் - நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன் - சங்கீதம் 141:5
தாவீது ராஜாவின் போலத்தான் ஏரோது ராஜாவும் பிறனுடைய மனைவியிடம் பாவம் செய்தான், ஏரோதின் பொல்லாப்பான காரியத்தை குறித்து யோவான் பேசின பொழுது ஏரோதியாள் யோவானை திட்டமிட்டுக் கொலைச்செய்தாள் - 3.ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான். 4.ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5.ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6.அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7.அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8.அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9.ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு, 10.ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். 11.அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள் - மத்தேயு 14:3-11
ஆனால் பத்சேபாளோ அப்படிச் செய்யவில்லை, மாறாக தன்னுடைய ஒரு மகனுக்கு தன்னை கடிந்துக்கொண்ட தீர்க்கதரிசியான நாத்தானின் பெயரை வைத்து அவரை கனப்படுத்தினாள், இப்படி தீர்க்கதரிசியான நாத்தானின் பெயரை கொண்டிருந்த பத்சேபாளின் குமாரனான நாத்தான் வம்சத்தில் பிறந்த மரியாளுக்குத் தான் இயேசுகிறிஸ்துவை கருவில் சுமக்கும் பாக்கியம் கொடுக்கப்பட்டது - 1.தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன். 2.கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன். 3.அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன். 4.இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான். 5.எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், 6.இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், 7.நோகா, நேபேக், யப்பியா, 8.எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே. 9.மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர் - I நாளாகமம் 3:1-9
அது மாத்திரம் இல்லாமல், பத்சேபாள் தன் பாவங்களை வெளிப்படுத்திய நாத்தானை விரோதியாக பார்க்காமல், நாத்தானின் ஆலோசனையை கேட்டு தன் மகன் சாலொமோனை ராஜாவாக்கினாள், இப்படி பத்சேபாள், தேவன் இந்த பூமிக்கு வருவதற்கான தந்தை வழிக்கான பாக்கியத்தையும், தாய் வழிக்கான பாக்கியத்தையும் சுதந்தரித்துக்கொண்டாள் - 11.அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா? 12.இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன். 13.நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள். 14.நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான் - I இராஜாக்கள் 1:11-14