பதினாலு தலைமுறைகளாக

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுவுருவெடுக்க தெரிந்துக் கொண்ட வம்சத்தை வம்சவரலாறு இல்லாதவரின் வம்சவரலாறு என்கிற தலைப்பில் பார்த்தோம், இதில் தந்தை வழிமுறையை அப்போஸ்தலனாகிய மத்தேயு மூன்று பகுதிகளாக பிரிக்கிறதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் - மத்தேயு 1:17

இதில் முதல் பகுதி ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும், இரண்டாம் பகுதி தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும், (யோசியா மற்றும் எகோனியா என்ற இரண்டு ராஜாக்களின் காலம் வரைக்கும்), மூன்றாம் பகுதி பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் என பிரிக்கப்பட்டுள்ளது.

இராஜாக்களின் புஸ்தகத்தை கற்று தேர்ந்தவர்களுக்கு யோசியா ராஜா பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலத்திற்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தலாம், ஆனால் தேவ வார்த்தைக்கு எதிர்த்து நின்ற யோசியாவின் மகன்களின் நீக்கப்பட்டதினால், யோசியா ராஜாவின் பெயர் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலத்திற்குள் வந்ததை பார்க்கலாம் - பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான் - மத்தேயு 1:11