வேதாகமத்தில் தீவுகள் என்ற வார்த்தை எதனை குறிக்கிறது

வேதாகமத்தில் தீவுகள் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப் பட்டிருக்கிறதை பார்க்க முடியும், அந்த தீவுகள் என்ற வார்த்தை எதை குறிக்கிறது? அதன் பொருள் தான் என்ன?

வேதாகமத்தின் அடிப்படையில் இதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள, ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த வசனத்தை எடுத்துக் கொள்வோம் - 1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். 3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும் - ஏசாயா 42:1-4


ஏசாயாவின் இந்த தீர்க்கதரிசன வசனத்தை, புதிய ஏற்பாட்டில் விளக்கிச் சொல்லும் பொழுது, தீவுகள் என்ற வார்த்தை புறஜாதியாகிய நம்மை குறிப்பதை பார்க்க முடிகிறது - 18. இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19. வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. 20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21. அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே - மத்தேயு 12:18-21


எரேமியா தீர்க்கதரிசியும், புறஜாதியாகிய நம்மை ஜாதிகளே என்றும் தீவுகள் என்றும் அழைத்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை முன்னறிவித்திருக்கிறார் - ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள் - எரேமியா 31:10

இப்படி தீவுகள் என்ற வார்த்தை பலவிதமான பாஷைகளை பேசும் புறஜாதி மக்களை குறிக்கிறது என்பதை ஆதியாகமம் புஸ்தகமும் உறுதிப்படுத்துகிறது - 1.நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். 2.யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 3.கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 4.யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 5.இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன - ஆதியாகமம் 10:1-5